திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம், குழு விளையாட்டு ஜன.31ல் துவக்கம்

திண்டுக்கல், ஜன. 28: திண்டுக்கல்லில் மாவட்ட விளையாட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம், குழு விளையாட்டு போட்டி ஜன.31ல் துவங்கவுள்ளதாக கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார். இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் ஜன. 31ம் தேதி காலை 9 மணி முதல் துவங்கவுள்ளது. கை, கால் ஊனமுற்றோர்கள் பிரிவில் கால் ஊனமுற்றோர்களுக்கு 50 மீ ஓட்டமும், குண்டு எறிதலும், கை ஊனமுற்றோர்களுக்கு 100 மீ ஓட்டமும், உயரம் குறைந்த மாற்றுதிறனாளிக்கு 50 மீ ஓட்டமும், இரு கால்களும் ஊனமுற்ற மாற்றுதிறனாளிகளுக்கு 100 மீ சக்கர நாற்காலி, குழு போட்டியில் இறகுப்பந்து ஒரு அணிக்கு (ஒற்றையர் மற்றும் இரட்டையர்) 5 வீரர்கள், மேஜைப்பந்து போட்டியில் ஒரு அணிக்கு 2 வீரர்களும் வீதம் பங்கேற்கலாம்.

பார்வையற்றோர்களுக்கான போட்டியில், முற்றிலும் பார்வைற்றோர்களுக்கு 50 மீ ஓட்டம், குண்டு எறிதல், மிககுறைந்த பார்வைற்றோர்களுக்கு 100 மீ ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், மெதுபந்து எறிதல், குழு போட்டியில் சிறப்பு வாலிபால் அணியில் 7 வீரர்களும் பங்கேற்கலாம். மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் புத்தி சுவாதினம் தன்மை முற்றிலும் இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ ஓட்டம் மற்றும் மெதுபந்து எறிதல், புத்தி சுவாதினம் தன்மை நல்ல நிலையில் இருக்கின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், மூளை நரம்பு பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு நின்ற நிலையில் தாண்டுதல், குழு போட்டிகளில் ஒரு அணிக்கு 7 வீரர்களும் பங்கேற்கலாம்.

காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டமும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதலும், கபடி போட்டியில் ஒரு அணிக்கு 7 வீரர்களும் கலந்து கொள்ளலாம் மேற்காணும், நான்கு பிரிவுகளில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. தினப்படி மற்றும் பயணப்படி வழங்கப்படமாட்டாது. போட்டியில் கலந்து கொள்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ சான்று / மாவட்ட மறுவாழ்வு அதிகாரி அவர்களால் வழங்கப்பட்ட சான்று / தலைமை அலுவலகத்தால் வழங்கப்பட்ட தவிர்க்க இயலாத சான்று இவற்றில் ஏதாவது ஒன்று பெற்று வருதல் வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இடத்தில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள். மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலரை நேரடியாகவோ அல்லது 0451-2461162 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

Related Stories: