கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வெற்றிபெற்ற 36 ஊராட்சி தலைவர்கள் அறிமுக கூட்டம்

கந்தர்வகோட்டை, ஜன.28: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலம் நடைபெற்ற தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 36 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அறிமுக கூட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிமுக கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ரெத்தினவேல் (எ) கார்த்திக் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ் மற்றும் குமரன், துணை தலைவர் செந்தாமரைகுமார் முன்னிலை வகித்தனர். 36 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். கூட்டத்தில் மூத்த தலைவர்கள் பரமசிவம், நாராயணசாமி ஆகியோர் தலைவர்கள் நடந்து கொள்ளும் முறைகளை விளக்கி கூறினர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) குமரன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் சிலர் ஏற்கனவே தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர்களுக்கு அரசாணை எண் 205 பற்றி எடுத்துரைக்கப்பட்டது. தலைவர்கள் மத்தியில் ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக் பேசுகையில், எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றியுள்ளனர். தற்போது மீண்டும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் சிறப்பாக வர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றியக்குழு தலைவருக்கு சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், மயில்வாகனன், கணேசன், சுசீலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், மேற்பார்வையாளர்கள் விளக்கன், சிவபிரகாசம், அபிநயா, சரவணன், பூங்கொடி ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர். அரசின் திட்டங்களை உடனுக்குடன் பயனாளிகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்திக் கொள்ள தலைவர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டது.

Related Stories: