100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு கலெக்டரிடம் விவசாயி புகார் மனு

திருப்பூர், ஜன.28: திருப்பூர், நஞ்சியம்பாளையம் பஞ்சாயத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக அப்பகுதி விவசாயி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். தாராபுரம் அடுத்த நஞ்சியம்பாளையம் பஞ்சாயத்து குப்பிச்சிபாளையத்தில் ராஜா (40) என்கிற விவசாயி கூறியதாவது: எனது தோட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக 100 நாள் வேலை திட்டம் என அழைக்கப்படும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆட்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 24ம் தேதி நான் வெளியில் சென்றுவிட்டேன். பின்னர், பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வேலைக்கு வந்தவர்களின் எண்ணிகை குறித்து விசாரித்த பொழுது 33 ஆட்கள் அனுப்பப்பட்டதாக தெரிவித்தனர். அதன்பின்னர், நேரில் சென்று பார்த்தால் 24 ஆட்கள் மட்டுமே பணியில் இருந்தனர். இதுகுறித்து, பணித்தள பொறுப்பாளரிடம் கேட்டால் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.  மேலும், இதுகுறித்து பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தேன். இதை திசை திருப்பும் பொருட்டு தாராபுரம் போலீஸ் நிலையத்தில் என் மீது புகார் அளித்துள்ளனர். இதுபோன்று, தாராபுரம் பகுதியில் மற்ற பஞ்சாயத்துகளிலும் குளறுபடிகள் நடக்கின்றது.

ஆகையால், இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.இதுகுறித்து, நஞ்சியம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் ரஜினிகாந்த் கூறுகையில், ‘‘அன்றைய தினம் வேலை செய்பவர்களின் வருகை பதிவேடு எடுத்த வர ஒருவர் சென்றுவிட்டார். மற்ற இருவர்கள் வருகை பதிவேட்டை சரி செய்து கொண்டிருந்தனர். மேலும், சில ஆட்கள் வேலைகளுக்கு சென்று திரும்புவதற்குள் தோட்டத்தின் கதவை மூடிவிட்டனர். இதுகுறித்து ராஜா கேள்வி கேட்ட பொழுது பணித்தள பொறுப்பாளர் பஞ்சவர்ணத்திற்கும் ராஜாவுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ராஜா பஞ்சவர்ணத்தை தாக்க முற்பட்டுள்ளார். ஆகையால், ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ராஜா மீது தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. ஆகையால், இதில் முறைகேடு செய்ய ஏதும் இல்லை,’’ என்றார்.

Related Stories: