சத்துணவு பணியாளர் காலி பணியிடங்கள் நிரப்புவதில் தாமதம்

ஊட்டி,ஜன.28: பிற மாவட்டங்களில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மோலாக சத்துணவு பணியாளர்கள் காலிபணியிடங்கள் நிரப்ப படாமல் உள்ளது.   நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் மற்றும் உதவியாளர்  பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கலாம் என கடந்த இரு ஆண்டிற்கு முன் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது. இதை தொடர்ந்து மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள பலரும் விண்ணப்பித்தனர். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆளுங்கட்சியினரிடம் ரூ.1 லட்சம் முதல் 3 லட்சம் வரை பெரும்பாலானவர்கள் கொடுத்தனர். கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்னரே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சத்துணவு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் நியமிக்கப்படாமல் இருந்தது. இதற்கு காரணம், ஆளுங்கட்சியினர் மற்றும் மக்கள் நிரதிநிதிகள் சிலர் பணத்தை வாங்கிக் கொண்டு தாங்கள் அளிக்கும் பட்டியலில் உள்ள பெயர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வற்புறுத்தியதாக கூறப்பட்டது. ஆனால், அதனை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும், ஆளுங்கட்சி கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு பணி வழங்க முடியாது. நேர்மையான முறையில் தேர்வு செய்யப்பட்டு, தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் ஓராண்டு காலம் பணி நியமனம் செய்யப்படாத நிலையில், கடந்த ஆண்டு சிலருக்கு நேர் காணலுக்கான கடிதம் அனுப்பியது. ஆனால், நேர்காணலுக்கு சென்றவர்களுக்கு இதுவரை பணி வழங்கப்படவில்லை. மேலும், இந்த நேர்காணல் குறித்த முடிவுகளும் வெளியிடப்படவில்லை. இதுவரை நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்படவில்லை. மற்ற மாவட்டங்களில் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டு இரு ஆண்டுகள் ஆன நிலையில், நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நேர்மையான முறையில் நடத்தப்பட்ட நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்களை பணியமர்த்த வேண்டும்  அல்லது புதிதாக நேர் காணல் நடத்தி தகுதியானவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பெரும்பாலான சத்துணவு மையங்களில் அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், அங்கு தரமான உணவு மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கிடைக்கிறதா என்பது கேள்வி குறியாக உள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடத்தை நிரப்பினால் மட்டுமே குழந்தைகளுக்கு தரமான உணவு மற்றும் அனைத்து வகையான உணவும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு சத்துணவு அமைப்பாளர் பணியாளர்களை நியமனம் செய்வது அவசியம்.

Related Stories: