விதிமீறல் கட்டிடங்கள் அதிகரிப்பு

கோவை, ஜன.28:  கோவை நகரில் விதிமுறை மீறல் கட்டிடங்கள் அதிகமாகி வருகிறது. அடுக்குமாடி வணிக கட்டிடங்களின் முறைகேடுகளை தடுக்க மாநகராட்சி, திட்ட குழுமம் தயக்கம் காட்டி வருகிறது. கோவை நகரில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள் இருக்கிறது. கடந்த 10 ஆண்டிற்கு மேலாக அடுக்குமாடி, வணிக கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டுவது பரவலாக அதிகமாகி விட்டது. நகரில் விதிமுறை மீறல் கட்டிடங்களை கண்டறிய மாநகராட்சி, உள்ளூர் திட்ட குழுமத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. புவியியல் தகவல் அமைப்பின் படி (ஜி.ஐ.எஸ்.) நகரில் கட்டிடங்களின் விவரங்களை பதிவு செய்ய மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இந்த கணக்கெடுப்பு பணி முறையாக நடக்கவில்லை. இரு முறை சர்வே எடுத்து நிராகரிக்கப்பட்டது. மீண்டும் சர்வே ஜி.ஐ.எஸ். சர்வே நடக்கவில்லை. நகரின் கட்டிட விவரங்கள் ‘ஆன்லைன்’ மயமாக்கும் திட்டம் முடங்கி கிடக்கிறது. கடந்த 2008ம் ஆண்டில் ஆட்டோ டி.சி.ஆர். என்ற ஆன்லைன் கட்டிட வரைவு அனுமதி பெறும் திட்டம் மாநகராட்சியில் துவங்கியது. இதிலும் பெரும் குளறுபடி நீடிக்கிறது.  அடுக்குமாடி கட்டிட அனுமதி விண்ணப்பங்களுக்கு 30 நாளில் முடிவு தெரிவிக்கவேண்டும். வரைவு ஏற்பு அல்லது நிராகரிப்பு, அதற்கான காரணங்களை விளக்கவேண்டும் என உத்தரவு உள்ளது. ஆனால் ஒரு ஆண்டிற்கு மேலாக கட்டிட வரைவு அனுமதி வழங்கும் விண்ணப்பங்களை காத்திருப்பில் வைப்பது வாடிக்கையாகி விட்டது. புரோக்கர்கள் மூலமாக வரும் விண்ணப்பங்கள் மட்டுமே நகரமைப்பு பிரிவில் நகர்வதாக சர்வேயர்கள் புலம்புகின்றனர்.

கட்டிட வரைவு, சொத்து வரி மூலமாக பல கோடி ரூபாய் வருவாய் குவிந்தும், மாநகராட்சி, உள்ளூர் திட்ட குழுமத்தினர் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை என்ற புகார் அதிகரித்து வருகிறது. சில  விதிமுறைமீறல்  கட்டிடங்களுக்கு பெயரளவிற்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. கட்டிடங்களில் பெரும் விபத்து ஏற்படும் காலங்களில் மட்டும், சில கட்டிடங்களின் மீது பெயரளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நகரில், கடந்த 2 ஆண்டுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடிகளில் 10 முதல் 90 சதவீத விதிமுறை மீறல் இருப்பதாக தெரிகிறது. கட்டிட வரைவு அனுமதியின்படி கட்டிடம் கட்டாவிட்டால் அதை இடிக்க மாநகராட்சிக்கும், உள்ளூர் திட்ட குழுமத்திற்கும் அதிகாரம் உள்ளது. ஆனால் இந்த அதிகாரத்தை அதிகாரிகள் முறையாக பயன்படுத்துவதில்லை. ஜவுளிக்கடை, ஷாப்பிங் மால்களில் அவசர கால வெளியேற்ற பாதைகள் அமைக்கப்படவில்லை. குறுகிய இடத்தில் அடுக்குமாடிகள் கட்டடப்படுவதால் தீ விபத்து அபாயம் உள்ளது. பொது திறவிடம், பார்க்கிங் வசதியின்றி அடுக்குமாடிகள் உருவாகிறது. விதிமுறை மீறல் கட்டிடங்களால் ரோட்டை பார்க்கிங் ஏரியாவாக மாற்றி வருவது வாடிக்கையாகி விட்டது. அடுக்குமாடிகள் முறைகேடு, பார்க்கிங் வசதியின்மை, இடவசதியில்லாத ரோட்டில் அமைக்கப்படும் வணிக கட்டிடங்களால் நகர போக்குவரத்தில் பாதிப்பு நிலவுகிறது. அனுமதியற்ற, முறைகேடான கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நகரில் நிலவும் போக்குவரத்து பிரச்னைகளுக்கும், விபத்துகளுக்கும் தீர்வு காண முடியும் என சர்வேயர்கள் தெரிவித்தனர்.

Related Stories: