மயிலம்பாடி அருகே போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறப்பு

பவானி,  ஜன. 28:   பவானி ஊராட்சி ஒன்றியம், மயிலம்பாடி ஊராட்சி, போத்தநாயக்கனூரில்  டாஸ்மாக் கடை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று திறக்கப்பட்டது.  பவானி  அடுத்த மயிலம்பாடி ஊராட்சி, போத்தநாயக்கனூரில் டாஸ்மாக் கடை எண் 3571,  கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்புத்  தெரிவித்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனால்,  நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் கடை மூடப்பட்டது. இந்த உத்தரவை  எதிர்த்து, விவசாய நிலங்களில் மதுக்கடை திறப்பது குறித்து மேல்முறையீடு  செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விதிமுறைகளுக்கு  உட்பட்டு மதுக்கடைகள் திறக்கலாம் என உத்தரவிட்டது. உள்ளாட்சித் தேர்தல்  நடைபெற்றதால் கடந்த சில மாதங்களாக மதுக்கடை திறக்கும் பணி ரகசியமாக நடந்து  வந்தது.  இந்நிலையில், மயிலம்பாடி ஊராட்சியில் தலைவர் ஸ்ரீஜெயந்தி  தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மதுக்கடை  திறக்க எதிர்ப்புத் தெரிவித்து மனு அளிக்கப்பட்டது. அதேவேளையில், மதுக்கடை  வேண்டும் என கல்வாநாயக்கனூர், போத்தநாயக்கனூர், காத்தாம்பாளையம், புதூர்  பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள் மனு அளித்தனர். நேற்று பலத்த போலீஸ்  பாதுகாப்புடன் மதுக்கடை திடீரென திறக்கப்பட்டது. இந்த தகவல் பரவியதால்,  குடிமகன்கள் உற்சாகமாக திரண்டு வந்தனர். அதே நேரத்தில் பொதுமக்கள் யாரேனும்  மதுக்கடைக்கு எதிராகப் போராட்டம் நடத்தலாம் என்பதால், போலீசார் தொடர்ந்து  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்கள் எதிர்ப்பையும்  மீறி மதுக்கடை திறக்கப்பட்டதால் குடிமகன்கள் மகிழ்ச்சியிலும்,  குடிமகன்களால் ஏற்படும் பிரச்னைகளை எப்படி சமாளிப்பது என அப்பகுதி மக்கள்  திகைப்பிலும் உள்ளனர்.

Related Stories: