தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு ₹21 ஆயிரம் அபராதம்

தர்மபுரி, ஜன.28:தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ₹21 ஆயிரம் அபராதம் விதித்தனர்.  தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், நேற்று தர்மபுரி டவுன் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடைகளில் திடீர் சோதனை செய்தனர். இதில், தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு, தலா ₹5 ஆயிரம் அபராதம் விதித்தனர். அச்சிட்ட செய்திதாளில் திண்பண்டங்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு தலா ₹2 ஆயிரமும், லேபிள் விதிகளை நடைமுறைப்படுத்தாத 3 கடைகளுக்கு தலா ஆயிரம் என மொத்தம் ₹21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.  இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் பானு சுஜாதா கூறுகையில், ‘அபராத தொகையை நோட்டீஸ் வழங்கிய 3 நாட்களில் செலுத்த வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். உணவு பாதுகாப்பு உரிமம் எடுக்காத 20 கடைகளுக்கு உரிமம் பெற பதிவு செய்ய அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கியுள்ளோம். உணவு பாதுகாப்பு உரிமத்தை பெற 7 நாட்களுக்குள் பதிவு செய்து சான்றிதழ் எடுக்காவிட்டால் ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்,’ என்றார்.

Related Stories: