குடியாத்தம் அருகே குட்டியுடன் யானை அட்டகாசம் வாழைத் தோட்டம் சேதம், விவசாயிகள் வேதனை

குடியாத்தம், ஜன. 28: குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் குட்டியுடன் புகுந்த யானை, அங்குள்ள வாழைத்தோட்டத்தை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி கிராமம் அருகே காப்புக்காடு உள்ளது. இங்குள்ள ஒரு யானை தனது குட்டியுடன் விவசாய நிலத்திற்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்தது. அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது. இந்த சத்தத்தை கேட்டு அப்பகுதிக்கு வந்த விவசாயிகள், யானைகளை விரட்ட முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்து குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர். மேலும், குட்டியுடன் அந்த யானை மீண்டும் எந்த நேரத்திலும் விவசாய நிலத்துக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

ஏற்கனவே, கடந்த 25ம் தேதி குடியாத்தம் அடுத்த சைனாகுண்டா வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் நுழைய முயன்ற 15க்கும் மேற்பட்ட யானைகளை வனத்துறையினர் ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஆனால் மீண்டும் அங்கிருந்து தமிழக வனப்பகுதிக்கு யானைகளை ஆந்திர வனத்துறையினர் விரட்டினர். அவற்றை குடியாத்தம் வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் கிராம பகுதியில் நுழையாமல் இருக்க தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: