திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் என்னை பராமரிக்காத மகன்களிடமிருந்து சொத்தை மீட்டுக்கொடுங்கள்

திருவண்ணாமலை, ஜன.28: தன்னை பராமரிக்காத மகன்களிடமிருந்து சொத்தை மீட்டு தரக்கோரி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மூதாட்டி கண்ணீர் மல்க மனு அளித்தார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள்குறை தீர்வு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் டிஆர்ஓ ரத்தினசாமி, சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டீனாடார்த்தி, மாவட்ட விநியோக அலுவலர் ஹரிதாஸ், மாவட்ட தாக்கோ மேலாளர் ஏழுமலை, மாவட்ட பழங்குடியின நல அலுவலர் இளங்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி, திருமண நிதியுதவி, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 506 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 16 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையாக தலா மாதம் 1000மும், 2 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். இதைத்தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவகத்திற்கு நேரில் சென்று மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தினார். குறைதீர்வு கூட்டத்தில், தண்டராம்பட்டு அடுத்த மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி சரஸ்வதி என்பவர் கலெக்டரின் காலில் விழுந்து அழுது தன்னை பராமரிக்காத தனது மக்கன்களிடமிருந்து சொத்துக்களை மீட்டு தரக்கோரி கோரிக்கை வைத்தார். அவருடன் அவரது 2 மகள்கள் வந்திருந்தனர். பின்னர் அவரை மீட்ட கலெக்டர் அவரிடம் இருந்து கோரிக்கை மனுவினை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தினார். அந்த மனுவில், எனது கணவர் ஆறுமுகம், எங்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. எனது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அவர் மருத்துவ சிகிச்சை பெறும்போது, அவரிடம் கையெழுத்து பெற்று எனது மகன்கள் இருவரும் சொத்துக்களை அவர்கள் பெயரில் பத்திர பதிவு செய்து கொண்டனர். எனது கணவர் இறந்த பின்னர் அவர்கள் என்னை பராமரிக்காமல், உணவு கூட வழங்குவது கிடையாது. எனது மகள்கள் தான் பராமரித்து வருகின்றனர். எனவே எனது கணவரிடமிருந்து பெற்று தங்கள் பெயருக்கு நிலத்தை பத்திர பதிவு செய்து கொண்டதை ரத்து செய்து என்னிடமே மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதேபோல், வந்தவாசி தாலுகா நம்பேடு கிராமத்ைத சேர்ந்த பொதுமக்கள், தங்கள் கிராமத்தில் புதியதாக கல்குவாரி அமைக்கப்பட உள்ளது. கல்குவாரி அமைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனவே எங்கள் பகுதியில் கல்குவாரி அமைக்கப்பட உள்ளதை தடுக்க வேண்டும் என கோரி மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 மாற்றுத்திறனாளி உள்ளடக்கிய பள்ளி ஆயத்த மைங்களில் பணிபுரியும் மைய பொறுப்பாளர்கள், கடந்த 20 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி உள்ளடக்கிய பள்ளி ஆயத்த மையங்களில் பணிபுரிந்து வருகிறோம். தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட எங்களுக்கு மாதம் 5,500 ஊதியம் வழங்கப்படுகிறது. பல வருடங்களாகியும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. எனவே தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ஊதியத்தை உயர்த்தி வழங்கிட பரிந்துறை செய்ய ேகாரி மனு அளித்தனர். மனுவினை பெற்று கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் வராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றதையொட்டி, மனுக்களை அளிக்க ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். மனுக்களை முதலில் கணினியில் பதிவு செய்ய நீண்ட வரிகையில் நீண்ட நேரம் காத்துக்கிடந்தனர். இதனால் வயதானவர்களும், கை குழந்தைகளுடன் வந்தவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகினர். ஒவ்வொரு குறைதீர்வு கூட்டத்திலும் பொதுமக்கள் மனுக்களை பதிவு செய்ய பல மணி நேரம் காத்திக்க வேண்டியுள்ளதால், விரைவாக பதிவு செய்திட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். குறைதீர்வு கூட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்களின் பேக்குகள் சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.

Related Stories: