விபத்துக்களில் உயிரிழந்தோரில் 56% பேர் இளைஞர்கள் டிஎஸ்பி ராமசந்திரன் வேதனை

மார்த்தாண்டம், ஜன.28: தேசியசாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி மினி பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு சாலை பாதுகாப்பு, விதிமுறைகளை மதித்து விபத்தில்லாமல் வாகனம் ஓட்டுவது  குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தக்கலையில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். செயலாளர் டேவிட் முன்னிலை வகித்தார். விழாவில் தக்கலை டிஎஸ்பி ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:- தமிழகத்தில் குமரி மாவட்டம் அதிக கல்வியறிவு பெற்ற மாவட்டமாக விளங்குகிறது. ஆனால் இவ்வளவு கல்வியறிவு கொண்ட மாவட்டத்தில் ஆண்டுதோறும் விபத்தில்  உயிரிழப்பு அதிகம் ஏற்ப்பட்டு வருவது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல்கள், அஜாக்கிரதை, அதிக வேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது போன்ற காரணங்களால் கடந்த ஆண்டு மட்டும் 1,402 பேர் படுகாயமடைந்துள்ளனர். 211 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இளைஞர்கள் 56 சதவீதம் உயிரிழந்திருப்பது கவலைதரும் விஷயமாக உள்ளது.

கை, கால்களை இழந்த வாலிபர்கள் இதில் அதிகமாக உள்ளனர். விபத்துக்களுக்கு குடிபோதை, அதிக வேகம், அஜாக்கிரதை போன்றவை அதிக காரணங்களாக உள்ளன. எனவே மினி பஸ் ஓட்டுனர்கள் சாலை விதிகளை மதித்து பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும். வாகன ஓட்டுனர்கள் செல்போன் பேசியபடியே ஓட்டுவது. பயணிகளுடன் பேசிக்கொண்டே ஒட்டுவது அலட்சியமாக வாகனங்களை முந்தி செல்வது, குடிபோதையில் ஒட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தங்களது குடும்பங்களையும், குழந்தைகளையும் மனதில்கொண்டு ஓட்டுனர்கள செயல்பட வேண்டும். விழாவில் குழித்துறையில் மினிபஸ் மோதி படுகாயமடைந்த கல்லூரி மாணவி சுஜித்ராவுக்கு நிதி உதவியை டிஎஸ்பி ராமச்சந்திரன் வழங்கினார். விழாவில் தக்கலை டிராபிக் இன்ஸ்பெக்டர் டேனியல் கிருபாகரன், மினிபஸ் உரிமையாளர்கள் செல்லன், ஜாண் சட்ட ஆலோசகர் சிங் ஜோன்ஸ் மற்றும் மணிகண்டன், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: