திருவண்ணாமலை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று 860 கிராம ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம் கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை, ஜன.24: திருவண்ணாமலை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று 860 கிராம ஊராட்சிகளில்  கிராம சபா கூட்டங்கள் நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; வருகிற 26ம் தேதி குடியரசு தினத்தன்று காலை 11 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டங்கள் நடைபெற உள்ளது. அனைத்து பொது மக்கள் இந்த கிராம சபா கூட்டங்களில் பங்குபெற்று கூட்டத்தில் வைக்கப்படும் பொருட்கள் குறித்து விவாதிக்கலாம். அன்று நடைபெற உள்ள கிராம சபா கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ெபாதுநிதி செலவினம், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பது, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

மேலும் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள், மக்கள் திட்டமிடல் இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் 2020-21, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் சக்தி அபியான், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் உள்ளிட்ட இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும். எனவே, கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து பொதுமக்களும் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபா கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: