இரவு நேரங்களில் குடிமகன்கள் அட்டகாசம் பாராக மாறிய அரசு பள்ளி வளாகம்

திருவொற்றியூர்: மாத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தை குடிமகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்துவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மணலி அடுத்த மாத்தூர், எம்எம்டிஏ 3வது பிரதான சாலையில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை. ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பி வேலியும் ஆங்காங்ேக உடைந்து, பள்ளி வளாகம் திறந்த நிலையில் உள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்தவர்களின் ஆடு, மாடுகள் பள்ளி மைதானத்தில் சுற்றித் திரிவதுடன், இரவு நேரங்களில் பள்ளி கட்டிடத்தில் படுத்து ஓய்வெடுக்கின்றன. இவற்றின் கழிவுகளால் தினசரி பள்ளி வரும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தெரு நாய்கள் அதிகளவில் திரிவதுடன், விளையாடும் மாணவர்களை கடிப்பதற்கு விரட்டுவதால், பீதியுடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், சமீப காலமாக இரவு நேரங்களில் குடிமகன்கள் பள்ளி வளாகத்தை திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மறுநாள் காலை பள்ளிக்கு வரும் மாணவர்கள், குடிமகன்கள் வீசி சென்ற காலி மது பாட்டில்கள், உணவு கழிவுகளை அகற்றிவிட்டு, வகுப்பறைக்கு செல்லும் நிலை உள்ளது.   

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘‘மாத்தூர், எம்எம்டிஏ 2வது பிரதான சாலை, காமராஜர் சாலை மற்றும் சின்ன மாத்தூர் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. இங்கு, மதுபானம் வாங்கும் குடிமகன்கள், இந்த பள்ளி கட்டிடத்திலும், பள்ளி மைதானத்திலும் அமர்ந்து மது அருந்துகின்றனர். இவர்கள் காலி மது பாட்டில்கள், உணவு கழிவுகள், வாட்டர் பாக்கெட் உள்ளிட்டவற்றை அங்கேயே வீசி செல்கின்றனர். இதனால், மறுநாள் பள்ளிக்கு வரும் மாணவர்கள் இந்த காலி மது பாட்டில்களை எடுத்து வெளியில் வீசிவிட்டு வகுப்பறைக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று மாவட்ட கல்வி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: