எய்ட்ஸ் நோயாளிகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும்

புதுச்சேரி, டிச. 5: எய்ட்ஸ் நோயாளிகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட நீதிபதி சோபனாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிஆர்டிசி பணிமனையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. பிஆர்டிசி உதவி மேலாளர் (நிர்வாகம்) ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் டாக்டர் கோவிந்தராஜ் நோக்க உரையாற்றினார். தமிழ்நாடு பாசிட்டிவ் மக்கள் நெட்வொர்க் அமைப்பின் திட்ட மேலாளர் எழில்பாரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலருமான சோபனாதேவி கலந்து கொண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு வினாடி வினா போட்டியில் ெவற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது,

ஒவ்வொருவருக்கும் அடிப்படை கடமைகள் இருக்கின்றன. அதனை சரிவர செய்தால் எந்த பிரச்னையும் இருக்காது. எய்ட்ஸ் சட்டத்தின்படி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இச்சட்டத்தை கடை

பிடிக்காதவர்களுக்கு 3 மாதம் முதல் 2 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றார்.

டாக்டர் சவுந்தர்யா எச்ஐவி பரிசோதனை மற்றும் சிகிச்சை முறை, வசதிகள் பற்றி எடுத்துரைத்தார். அவர் பேசுகையில், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறையும். மருந்து, மாத்திரைகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து, நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் நீண்டநாள் வாழ முடியும் என்றார். காசநோய் மருத்துவர் சந்திரமோகன் பேசும்போது, எய்ட்ஸ் நோய் பாதித்தவருக்கு சுலபமாக காசநோய் ஏற்படும். டி.பி எனப்படும் காசநோயால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இறக்கின்றனர். இருவாரத்திற்கு மேல் இருமல், சளி, எடை குறைதல், சளியில் ரத்தம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புதுச்சேரியில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் காசநோய் மருத்துவமனைகளில் பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. புதுச்சேரியில் 2 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. இருப்பினும், காசநோயை கட்டுப்படுத்த முடியவில்லை. 2025ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் பிஆர்டிசி அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: