விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு, நாளை வேட்புமனுதாக்கல் தொடங்குகிறது

விழுப்புரம்,  டிச. 5: ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கு நாளை  முதல் வேட்புமனுதாக்கல் தொடங்கும் நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  ஆட்சியர் அண்ணாதுரை திடீர் ஆய்வு செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு  போதிய வசதிகள் உள்ளதா? என்றும் சாமியானா பந்தல் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்  ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு  கடந்த 2ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி விழுப்புரம்  மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டாலும்  பழைய நடைமுறையை போலவே ஒருங்கிணைந்து உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என  ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். அதன்படி இருமாவட்ட அதிகாரிகள்,  அரசியல்கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் விழுப்புரம்  ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில்  இரண்டு கட்டங்களாக வரும் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்  ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் நடக்கிறது.

இதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை (6ம்  தேதி) துவங்குகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஊராட்சி ஒன்றியங்களில்  உள்ள 473 ஒன்றிய கவுன்சிலர், 47 மாவட்ட கவுன்சிலர், 1,099  ஊராட்சிமன்ற தலைவர், 8,247 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு  தேர்தல் நடக்கிறது.

ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு  கட்சி அடிப்படையிலும், ஊராட்சிமன்ற தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு  கட்சியின் அடிப்படையில்லாமலும் நடத்தப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான  வேட்புமனுதாக்கல் நாளை(6ம் தேதி) துவங்குகிறது. வரும்  13ம் தேதியுடன் வேட்புமனுதாக்கல் முடிவடைகிறது. மனுதாக்கல் செய்யும் 200 மீட்டர்தொலைவில்  கூட்டம் சேரக்கூடாது, அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்று  பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காவல்துறை சார்பில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை  வேட்புமனு தாக்கல் தொடங்கஉள்ள நிலையில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில்  அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளது.

இதனிடையே காணை ஊராட்சி  ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னேற்பாடு  நடவடிக்கைகள் குறித்தும், வேட்புமனுக்கள் பெறப்படும் இடத்தினையும் ஆட்சியர்  அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார். காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51  ஊராட்சிகளுக்கு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர்,  ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு நடத்தப்படும்  தேர்தலுக்கான ஏற்பாடுகளை கேட்டறிந்தார். வேட்புமனு தாக்கலுக்கு ஏதுவாக போதிய  இருக்கை, மேசை, வசதிகளை செய்துகொள்ளவும், மின்விசிறி, சாமியானா பந்தல்,  சாய்தளவசதிகள் உள்ளிட்டவை சரியானமுறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பதை  ஆட்சியர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் கணேசன், கிறிஸ்டோபர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: