ராமசாமி படையாட்சியாருக்கு அமைக்கப்பட்டது நினைவு மண்டபமா? மணிமண்டபமா?

கடலூர், டிச. 5: கடலூரை சேர்ந்த மறைந்த தலைவர்   எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் சுதந்திர போராட்ட வீரர், சமூக நீதிக்காகவும் இட ஒதுக்கீட்டுக்காகவும் பாடுபட்டவர். தன்னுடைய ஏராளமான சொத்துகளை கல்வி நிலையங்களுக்கும் ரயில்வே, பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கியவர். காமராஜர் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர். அவரின் தியாகத்திற்கும்  புகழுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் 1.70 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.2.15 கோடியில் அவருக்கான மணி மண்டபம் உருவாக்கப்பட்டது.  மண்டபம் முன்புறம் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம் என்ற பெயர் பலகையே பொறிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மண்டப திறப்பு விழாவிற்கான அழைப்பிதழில் நினைவு மண்டபம் திறப்பு விழா என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. கடலூரில் கடந்த நவம்பர் 25ம் தேதி நடந்த அரசு  விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நினைவு மண்டபத்தை திறந்து வைப்பதாகவே குறிப்பிட்டார். மண்டபம் முன்புறம் மணிமண்டபம் என்ற பெயர் பலகை பொறிக்கப்பட்டுள்ள நிலையில் அது நினைவு மண்டபமா? அல்லது மணி மண்டபமா?  என்ற குழப்பமும், சர்ச்சையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும்   இந்த பெயர் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திறக்கப்பட்டது மணி மண்டபம் தான் என அறிவிக்க வேண்டுமென்பது கடலூரில் பெரும்பான்மை மக்களின் கருத்தாக உள்ளது.

Related Stories: