பிளீச்சிங் பவுடர் தெளித்ததில் தகராறு சகோதரர்கள் மீது தாக்குதல்

பண்ருட்டி, டிச. 5: பண்ருட்டி அருகே தண்ணீர் தொட்டியில் பிளீச்சிங் பவுடர் அதிகம் தெளித்ததாக கூறி டேங்க் ஆபரேட்டர் மற்றும் அவரது தம்பியை இரும்புக்கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தந்தை, 2 மகன்கள் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பாப்பன்கொல்லை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (54). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி தண்ணீர் தொட்டி (டேங்க்) ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். தொடர்மழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் வேண்டுகோளுக்கு இணங்க டேங்க் ஆபரேட்டர் தேவராஜ் பாப்பன்கொல்லை கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பிளீச்சிங் பவுடர் தெளித்தார்.

பின்னர் கீழே இறங்கிய அவரிடம் அதே ஊரைச் சேர்ந்த ரங்கநாதன் (55), அவரது மகன்கள் சதீஷ், (22) ராஜதுரை (20) மற்றும் உறவினர் ராசாக்கண்ணு மகன் மாயவேல் (40) ஆகிய 4 பேரும் தண்ணீர் தொட்டியில் ஏன் அதிகளவில் பிளீச்சிங் பவுடர் போட்டாய்? என்று கேட்டு திட்டி உள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த சதீஷ் உள்ளிட்ட 4 பேரும் கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியால் தேவராஜை சரமாரி தாக்கி உள்ளனர். அப்போது அங்கு வந்த அவரது தம்பி சின்னராசு தட்டிக்கேட்டுள்ளார். இதில் அவருக்கும் அடி விழுந்தது. பின்னர் அந்த கும்பல் அண்ணன், தம்பி இருவருக்கும் கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

 பின்னர் தேவராஜ் அளித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர். இதில் சதீஷ், ராஜதுரை ஆகிய இருவரும் பட்டதாரிகள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: