6039 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

கடலூர், டிச. 5: உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு தனு தாக்கல் நாளை துவங்குகிறது.  இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 5040 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள், 287 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 683 சிற்றூராட்சி தலைவர்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 39 பதவிகளுக்கு தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து சட்டபூர்வ தேர்தல் அறிவிக்கை பெறப்பட்ட பின்னர் இரண்டு கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ள உள்ளாட்சி அமைப்புகள் விவரம் தெரிவிக்கப்படும். தேர்தல் நன்னடத்தை விதிகள் அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் கடந்த 2ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14  லட்சத்து  44 ஆயிரத்து 975 ஆகும். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை  7 லட்சத்து 18 ஆயிரத்து 728. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 26 ஆயிரத்து 184. மூன்றாம் பாலினத்தவர் 63 பேர் உள்ளனர். இரண்டு கட்ட தேர்தல் நடத்த கடலூர் மாவட்டத்தில் 21 ஆயிரம் பேர் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று கட்டமாக தேர்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.ஊரக பகுதிகளில் வாக்காளர்கள் வாக்களித்திட ஏதுவாக மொத்தம் 2 ஆயிரத்து 888 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 710 ஒரு வார்டு வாக்குச்சாவடிகளும், 2178 இரு வார்டு வாக்குச்சாவடிகளும் அடங்கும். ஆண் வாக்காளர்களுக்கான 26 வாக்குச்சாவடிகளும்,  பெண் வாக்காளர்களுக்கான 26 வாக்குச்சாவடிகளும் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்கான 2836 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு பழைய வாக்கு சீட்டு முறை, வாக்கு பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் கட்சி அடிப்படையிலும், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர், சிற்றூராட்சி  தலைவர்கள் தேர்தல் கட்சி அடிப்படையின்றியும் நடைபெறும்.  கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 723 பதற்றமான வாக்குச்சாவடிகளும், 33 மிக பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாக்குச்சாவடிகளில் மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் அலுவலர்கள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். வேட்பாளர்கள் செலவினம்,  அதிக பட்சத் தொகையாக கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ரூ.9 ஆயிரமும், கிராம ஊராட்சி தலைவர் ரூ.34 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு ரூ.85 ஆயிரமும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.ஒரு லட்சத்து 70 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக 6 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 29  உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக 14 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 49 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும்,  சிற்றூராட்சி வார்டு  உறுப்பினர் தேர்தலுக்காக 14 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 117 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், சிற்றூராட்சி தலைவர் தேர்தலுக்காக 683 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கும் என மொத்தம் 34  தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 878 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 14 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வேட்பு மனுதாக்கல்,  டிசம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 13ம் தேதி வரை (ஞாயிறு நீங்கலாக). வேட்பு மனுக்கள் ஆய்வு, டிசம்பர் 16ம் தேதி. மனுக்கள் திரும்ப பெறுதல், டிசம்பர் 18ம் தேதி பிற்பகல் 3 மணியுடன். முதல் கட்ட தேர்தல் வாக்கு பதிவு, டிசம்பர்  27ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை. இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்கு பதிவு, டிசம்பர் 30ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி. வாக்கு எண்ணிக்கை, ஜனவரி 2ம் தேதி காலை 8 மணி முதல்.பதவி ஏற்கும் நாள், ஜனவரி 6ம் தேதி. மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் மறைமுக தேர்தல், ஜனவரி 11ம் தேதி.இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

Related Stories: