பாசன நீரை பங்கிடுவதில் விவசாயிகளுக்குள் பிரச்னை

வத்திராயிருப்பு, டிச. 5: வத்திராயிருப்பு பகுதியில் கண்மாய் பாசன நீரை பங்கிடுவதில் ஏற்பட்ட பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டது.

வத்திராயிருப்பு பகுதியில் தொடர்மழையால் ஆறுகள் மூலம் ஆலங்குளம், வண்ணான்குளம் உள்ளிட்ட கண்மாய்களில் நீர்நிரம்பியுள்ளது. ஆனால், மாத்தூர் குளத்திற்கு தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி விவசாயிகள் வண்ணான்குளம் மதகை திறந்து விட்டு, மாத்தூர் குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து வண்ணான்குளம் மற்றும் மாத்தூர் குள பாசன விவசாயிகளுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது.

இதையடுத்து வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில், இரண்டு பாசன விவசாயிகள் மத்தியில் நேற்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கு கூடுதல் பொறுப்பு தாசில்தார் சரவணன் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை உதவிபொறியாளர் ராஜேந்திரன்ம் மண்டல துணை தாசில்தார் கலைச்செல்வி எஸ்.ஐ.செல்லப்பாண்டியன், கோட்டையூர் வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ‘மாத்தூர் குளத்திற்கு நேற்று முதல் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். அதன்பின் 5 நாட்களுக்கு வண்ணான்குளம் பாசன விவசாயிகளுக்கும், 5 நாட்களுக்கு மாத்தூர் குள விவசாயிகளுக்கும் தண்ணீரை பகிர்ந்து கொள்வது என சமாதானம் செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளத்துரை, மாயக்கிருஷ்ணன், அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: