ஜன.21ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கும் போராட்டம்

திருச்செங்கோடு, டிச.5: தமிழகம் முழுவதும், ஜனவரி 21ம் தேதி முதல் கள் இறக்கும்  அறப்போராட்டத்தில் கள் இயக்கம் ஈடுபடும் என்று நல்லசாமி தெரிவித்துள்ளார்.திருச்செங்கோட்டில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா மற்றும் 2020 நாட்காட்டி வெளியீட்டு விழாவிற்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் வக்கீல் நல்லசாமி  கூறியதாவது:ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்கிறது. உள்ளாட்சி தேர்தல்களில் அனைத்துப் பதவிகளுக்கும் சுயேச்சை சின்னம் கொடுத்தால், நல்லவர்கள் பொறுப்புக்கு வரும் வாய்ப்பு கூடும். உள்ளாட்சி தேர்தல் கிராமப்புறம், நகர்ப்புறம் என இரு பிரிவுகளாக பிரித்து நடத்துவது தவறில்லை. நாட்டில் இருந்த 39,500 ஏரி குளம், குட்டை கண்மாய்கள் போன்றவற்றில், இன்று 7 ஆயிரம் மாயமாகி உள்ளது. வரும் 2020  ஜனவரி 21ம் தேதி முதல், தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட இடங்களில், கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும். தமிழக அரசு உடனடியாக கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என யாரும் தடுக்க முடியாது. அதே நேரத்தில், நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன், தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: