மயிலாடும்பாறையில் கன மழையால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் தேவை

வருசநாடு, டிச.5: மயிலாடும்பாறை அருகே கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்படைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடும்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மூலவைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தென்னை, வாழை, தட்டைப்பயறு, மொச்சை, இலவமரம், எலுமிச்சை, பீன்ஸ் போன்ற பயிர்கள் சேதமடைந்தன. பயிர் பாதித்த பகுதிகளை கடமலைக்குண்டு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் மயிலாடும்பாறை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆனால், பாதிப்படைந்த பயிர்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கவில்லையென விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மயிலாடும்பாறை விவசாயி ஈஸ்வரன் கூறுகையில்,`` கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால், எந்த நிவாரணத்தையும் அவர்கள் வழங்கவில்லை.ஆற்றங்கரையோரம் உள்ள என்னுடைய விவசாய நிலத்தின் அருகே தடுப்புச்சுவர் கட்ட கோரி மனுவும் அளித்தேன். இதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை வேண்டும்’’ என்றார்.

Related Stories: