வடகிழக்கு பருவ மழை எதிரொலி நெற் பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

நாமக்கல், டிச. 5: வட கிழக்கு பருவ மழை எதிரொலியாக நெற்பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவித்துள்ளார்.இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்திலிருந்து நெற்பயிர்களை பாதுகாக்கவும், பயிர்கள் மூழ்குவதை தடுக்கவும் விவசாயிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.தாழ்வான பகுதிகளை இனம் கண்டு வயல்களில் தண்ணீரை வடித்திட விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விடவேண்டும். வடிகால் வாய்க்கால்கள் தண்ணீர் தேங்காது வடிந்திடும் வகையில் பொதுப்பணித் துறையினரை அணுகி தக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இளம் பயிர்கள் அதிக நாட்கள் நீரின் தேக்கத்தினால் தழை மற்றும் ஜிங்க் சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டு இளமஞ்சள் அல்லது மஞ்சளாக மாறும்பட்சத்தில் தண்ணீரை வடித்தவுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும்.தண்ணீர் தேக்கத்தினால் பயிர்வர்ச்சி குன்றி காணப்பட்டால் தண்ணீரை வடித்தவுடன் ஏக்கருக்கு யூரியா 22 கிலோவுடன், ஜிப்சம் 18 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 4 கிலோவை ஒரு நாள் இரவு கலந்து வைத்து 17 கிலோ பொட்டாஷ்  கலந்து மேலுரமிட வேண்டும். இளம் பயிர்களில் தண்ணீர் தேங்கி அழுகிய நிலை ஏற்பட்டிருப்பின் இருப்பில் உள்ள நாற்றுக்களை கொண்டு ஊடு நடவு செய்ய வேண்டும் அல்லது அதிக குத்துக்கள் உள்ள நடவு பயிரை கலைத்து பயிர் இல்லாத இடங்களில் நடவு செய்ய வேண்டும்.

 இயற்கை இடர்பாடுகளினால் பயிர் சேதத்தினை ஈடு செய்ய பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்யவேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் சம்பா நெற்பயிரில் பயிர் காப்பீடு செய்ய வரும் 15ம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அல்லது பொது சேவை மையத்தை அணுகி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: