தேனி மாவட்டத்தில் பொங்கல் பரிசு பயனாளிகள் பட்டியல் தயாரிப்பு பணி துரிதம்

தேனி, டிச. 5: தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கவதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. தமிழக அரசு, மாநிலம் முழுவதும் உள்ள 34 ஆயிரத்து 773 நியாய விலைக்கடைகள் மூலம் 2 கோடியே 5லட்சத்து 66 ஆயிரத்து 609 குடும்ப அட்டைதாரர்களுக்கு 6 கோடியே 68 லட்சத்து 7 ஆயிரத்து 878 பேருக்கு அத்தியாவசிய பொருள்களை மானிய விலையில் வினியோகம் செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவிற்காக தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கமாக்கி உள்ளது. இதில் ஆரம்பகாலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ உள்ளவர்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டது. பின் வேஷ்டி, சேலையுடன் பொங்கல் படைக்க தேவையான அரிசி, ஜீனி, முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய், கரும்பு ஆகியவை வழங்கப்பட்டு வந்தது. ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் கடந்த் 2016ம் ஆண்டு பொங்கல் பரிசுப் பொருள்களுடன் அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.100ம் சேர்த்து வழங்கப்பட்டது. அவர் மறைவிற்கு பிறகு, ஆட்சிக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொங்கல் பரிசுப்பொருள்களுடன் கடந்த ஆண்டு ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கியது. இத்தொகை அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

வருகிற பொங்கலுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுப்பொருள்களுடன் ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி.பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் சர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கார்டுகளை அரிசி வாங்கும் கார்டுகளாக மாற்றிக்கொள்ள சலுகை தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, கடந்த நவ.20ம் தேதி முதல் 30ம் தேதி வரை சர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களில் பலர் தங்கள் கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற விண்ணப்பித்து, அரிசி பெறும் கார்டுகளாக மாற்றியுள்ளனர். தேனி மாவட்டத்தில் நியாய விலைக்கடைகள் மூலமாக அரிசி பெறும் வகையில் 3 லட்சத்து 92 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளன. சர்க்கரை வாங்கும் வகையில் சுமார் 8 ஆயிரம் குடும்ப அட்டைகளும், எந்த பொருளும் வேண்டாம் என 413 கவுரவ குடும்ப அட்டைகளுமாக மொத்தம் 4 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட அளவில் உள்ள 526 நியாயவிலைக்கடைகள் மூலம் அத்தியாவசிய பொருள்கள் வினியோகிக்கப்படுகிறது.

இதில் சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றிக்கொள்ள அளித்த சலுகையின்படி, கடந்த மாதம் தேனி மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்து 697 கார்டுகள் அரிசி கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து தேனி மாவட்டத்தில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 300 குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறும் தகுதி படைத்த கார்டுகளாக தகுதி பெற்றுள்ளன. தமிழக அரசு அறிவித்தபடி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களின் பெயர் பட்டியல், முதியோர் உதவிதொகை பெறும் அட்டைதாரர்கள் பெயர் பட்டியல், அன்னபூர்ண அன்னயோஜனா திட்டத்தின் கீழ் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களின் பெயர் பட்டியலும் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

Related Stories: