வேளாண் விஞ்ஞானி வேதனை

காரைக்குடி, டிச.5: உலக மண் வளதினத்தை முன்னிட்டு குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவரும் முதுநிலை விஞ்ஞானியுமான முனைவர் செந்தூர்குமரன் கூறியதாவது: ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் உலக மண் வள தின விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம் மண். மண்ணில் விளைந்த அத்தனை பயிர்களும் உலகிலுள்ள உயிரினங்களுக்கு உணவாக பயன்படுகிறது. மண்ணில் வேதியியல் உரங்களின் அதிகமாக பயன்பாட்டால் தற்போது மண் மலடாகி வருகிறது. ஒரு காலத்தில் பொன்னாக இருந்த மண் தற்போது புண்ணாகி, மண்ணிலே விளையக்கூடிய சாத்தியக்கூறுகள் குறைந்து கொண்ட வருகிறது. மண்ணின் தன்மையானது வேளாண் தொழில் புரிபவர்கள் இடையே உணரப்படாமல் இருப்பதால் பரிந்துரைக்கப்பட்ட அளவைத்தாண்டிய உரங்கள், தேவையற்ற நேரத்தில் உரமிடுதல், வேளாண்மையின் விதி தளர்த்திய வேளாண்மை முறைகள், அறிவியலின் புரிதல் இன்றி வேளாண்மை தொழிலில் ஈடுபடுதல் போன்ற காணரங்களால் ஒரு சதுர அடி மண்ணிலே நிலை கொண்டுள்ள 5 லட்சம் கோடிக்கும் அதிகமாக நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அதனுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளன.

இந்த நுண்ணுயிரிகள் எல்லாம் செத்ததன் விளைவாக பயிர்களுக்கு கிடைக்ககூடிய சத்துக்கள் போதுமான அளவில் கிடைக்காமல் போய்விட்டது. இதனால் மகசூலும் குறைந்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட அளவை விட உரங்கள் பயன்படுத்தினால் மண்ணிற்கு மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததிக்கும் மிகவும் ஆபத்து ஏற்படும். வேதியியல் உரங்களை குறைத்து இயற்கையோடு இணைந்து அங்கக வேளாண்மையில் ஈடுபட்டால் மண்ணின் வளம் காக்கப்படும். மண் வளம் செழித்தால் பயிர்கள் கொழிக்கும். பயிர்கள் கொழித்தால் வேளாண் தொழில் செழிக்கும், ஆரோக்கிய உணவால் மனிதஆரோக்கியம் பெருகும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: