ராட்சத குழாயில் தண்ணீர் உறிஞ்சி விற்பனை தனியாருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பத்தூர், டிச.5: திருப்புத்தூரில் தாசில்தார் தலைமையில் ராட்சத குழாய் மூலம் தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக சமாதானக் கூட்டம் நடைபெற்றது. திருப்புத்தூர் வட்டம் இளையாத்தங்குடி உள்வட்டம் குன்றக்குடி குமரன் நகர் பகுதியில் ராட்சத குழாய் மூலம் தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்வதாகவும், இதை கண்டித்து கிராம பொதுமக்கள் பேருந்து மறியல் நடத்த போவதாகவும் சுவரொட்டி விளம்பரம் செய்தது தொடர்பான சமாதானக் கூட்டம் நேற்று தாசில்தார் ஜெயலெட்சுமி தலைமையில் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கிராமமக்கள் சார்பில், குன்றக்குடி வருவாய் கிராமம் ரயத்து புன்செய் சர்வே எண் 167/2ஏ இன் பட்டாதாரர் மேற்படி இடத்தில் அரசின் அனுமதி பெறாமல், 13 இன்ச் அகலத்தில் போர்வெல் அமைத்தும், நீர் தொட்டி கட்டியும் அனுபவம் செய்து வருகிறார். மேற்படி போர்வெல்லில் இருந்து தண்ணீர் எடுத்து வெளியூருக்கு விநியோகம் செய்து வருகிறார். இதனால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பிரச்சனை வருகிறது. அவ்வாறு செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். 5 இன்ச் அகலத்தில் போர்வெல் அமைத்து மேற்படி புலத்தின் உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

பின்னர் பட்டாதாரர் சார்பில், மேற்படி பட்டா நிலத்தில் 10 இன்ச் அகலத்தில் மட்டுமே போர்வெல் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனத்தின் மூலம் இயங்கும் உணவு விடுதி (கேண்டின்) பயன்பாட்டிற்காக தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தவில்லை என தெரிவித்தனர். மேற்படி இடத்தில் அரசின் முன் அனுமதி எதுவும் பெறாமல் போர்வெல் குழாய் அமைக்கப்பட்டு வெளியூருக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. பட்டதாரர் போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து வெளியில் கொண்டு செல்வதற்கு குன்றக்குடி கிராம பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்து வருவதாலும், பட்டாதாரர் முறையே அரசு அனுமதி பெற்று அதன் மூலம் தண்ணீர் எடுத்து அந்தக் புலத்திலேயே பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், வெளியில் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேற்படி முடிவுகளை இரு தரப்பினரும் ஏற்று வரும் டிச.7ம் தேதி அன்று குன்றக்குடி பொதுமக்கள் சார்பாக அறிவித்திருந்த பேருந்து மறியல் போராட்டத்தை கைவிடுவதெனவும், முடிவு செய்யப்பட்டு வட்டாட்சியர் முன்பு கையெழுத்து போட்டனர். இந்த சமாதான கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர் சுரேஷ், கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மல்குமார், குன்றக்குடி எஸ்.ஐ சித்திரைச்செல்வி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமயந்தி, வருவாய் ஆய்வாளர் லெட்சுமி, வி.ஏ.ஓ., காசிம்முகமது ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: