கிராம பகுதிகளில் களையிழந்த உள்ளாட்சி தேர்தல்

சாயல்குடி, டிச.5: தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் தனி அலுவலர் கட்டுப்பாட்டின் கீழ் நடந்து வந்தது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிச.27 மற்றும் 30ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க இருக்கிறது. மனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. தற்போது உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 பஞ்சாயத்து தலைவர்களுக்கும், 3075 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கும், 11 ஊராட்சி ஒன்றியங்களில் 170 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும், 17 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கும் என 3,691 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கலெக்டர் தலைமையில் கடந்த மூன்று நாட்களாக  பயிற்சி, ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்குப்பெட்டி சரி பார்ப்பு, வாக்காளர் படிவம் சரிபார்த்து பிரித்தல், வாக்கு சீட்டு சரி செய்தல் உள்ளிட்ட  தேர்தல் முன் ஏற்பாடுகள் விருவிருப்பாக நடந்து வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் என்றவுடன் கிராம பகுதிகளில் களை கட்டி விடும். ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவோரை சாதி, உறவினர்கள், வேண்டப்பட்டவர் என பிரித்து பார்த்து குழு, குழுவாக செயல்படுவர். ஒன்றிய, மாவட்ட கவுன்சிலருக்கு கட்சி மற்றும் உறவு ரீதியாகவும் அணுகுவது வழக்கம். இதனால் டீக்கடை, ஹோட்டல்களில் டோக்கன் முறை, மதியம், மாலை, இரவு நேரங்களில் மது கவனிப்பு என தடபுடல் உபசரிப்புகள் நடப்பதும். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வண்டிகளில் சென்று வர வீடு, வீடாக பெண்கள் உள்ளிட்டவர்களை அழைத்து ஆதரவு திரட்டுவது.

பொதுஇடங்களில் கூட்டம், கூட்டமாக நின்று விவாதிப்பது என கிராம பகுதிகள் களை கட்டுவது உண்டு. இதனால் வேட்பாளர்கள் தரப்பு கடன் வாங்கியாவது லட்சக்கணக்கான  ரூபாய் செலவு செய்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த முறை பல லட்சங்களை செலவு செய்த நிலையில், திடீரென தேர்தல் ரத்தானது. இதனால் பலர் கடனில் சிக்கி தவிக்கின்றனர். இதனால் உஷாரான வேட்பாளர்கள் தரப்பு, தற்போது உள்ளாட்சிக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதாலும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வர உள்ளதாலும், பெரும்பாலானோர் தேர்தல் நடக்குமா என சந்தேகத்தில் அமைதியாக உள்ளனர். இதனால் ஆதரவாளர்களும் அமைதி காத்து வருவதால் கிராமங்களில் உள்ளாட்சி தேர்தல் பரபரப்பின்றி அமைதியாக உள்ளது.

Related Stories: