2ம் நிலை காவலர் எழுத்து தேர்வில் 3,748 பேர் தேர்வு

தர்மபுரி, நவ.5: 2ம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 3,748 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு நாளை முதல் 8ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட எஸ்பி ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: 2ம் நிலை ஆண் மற்றும் பெண் காவலர்கள், தீயணைப்பு மற்றும் சிறை காப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து கலந்துகொண்டவர்களில் மொத்தம் 3,748 பேர் தேர்வாகியுள்ளனர். அதில் 2,785 பேர் ஆண், 963 பெண்கள் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு வரும் நாளை (6ம் தேதி) முதல் தர்மபுரி வெண்ணாம்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. உடற்தகுதித் தேர்வு 06.11.2019 முதல் 08.11.2019 வரை ஆண்களுக்கும், 09.11.2019 அன்று பெண்களுக்கும் நடைபெறவுள்ளது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 11.11.2019 முதல் நடைபெறவுள்ள கயியேறும் தேர்வு, ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், பந்து மற்றும் வட்டு எரிதல் போன்ற தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதில் தேர்வானவர்களுக்கு 14.11.2019 அன்று சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடக்கிறது. இந்தத் தேர்வுகளில் கலந்துகொள்ள அழைப்பாணை பெற்ற தேர்வர்கள், அழைப்பு கடிதத்துடன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடைபிடித்து தேர்வுக்கு ஆஜராக வேண்டும். செல்போன்கள் மற்றும் உடன் வரும் நபர்களை உள்ளே எடுத்துச் செல்லவோ, அழைத்துச் செல்லவோ அனுமதிக்கப்படமாட்டாது. மேலும் குறியீடுகள் பொறித்த சட்டையோ மற்றும் ஒரு குறிப்பிட்ட தேர்வு பயிற்சி மையத்தின் பெயர்கள் அச்சிடப்பட்ட உடைகளணிந்தோ அல்லது கையில் அடையாள கயிறுகள் மற்றும் பிற குறியீடுகள் அணிந்து யாரும் தேர்வில் கலந்துகொள்ள வந்தால் அனுமதிக்கபடமாட்டாது. தாங்கள் எடுத்து வரும் பொருட்களுக்கு, தாங்கள் தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும். தேர்வு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாகவே, தேர்வு மையத்தினுள் ஆஜராக வேண்டும். தாமதமாக வரும் நபர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: