வத்தலக்குண்டு ஜிஹெச்சில் பட்ட மரத்தால் பக்.. பக்.. உடனே அகற்ற கோரிக்கை

வத்தலக்குண்டு, டிச. 5: வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் பட்டுப்போன மரத்தால் நோயாளிகள் அச்சமடைந்து உள்ளனர். இதை உடனே அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. வத்தலக்குண்டுவில் அரசு மருத்துவமனை உள்ளது. இதனை வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள 30000க்கும் மேற்பட்டோரும், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஊராட்சிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இங்கு தினசரி சிகிச்சைக்காக 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு கடந்த ஒரு ஆண்டாக இரண்டு பட்டுப்போன நீலகிரி தைல மரங்கள் இருந்தன. இவற்றை அகற்றுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஒரு வழியாக ஏற்று பொதுப்பணித்துறை மருத்துவ பிரிவினர் கடந்த சில மாதங்களுக்கு ஒரு மரத்தை அகற்றினர். ஆனால் மற்றொரு மரத்தை விட்டு விட்டு சென்று விட்டனர். தற்போது அந்த பட்டுப்போன மரம் மேலும் காய்ந்து பலத்த காற்று அடிக்கும் போது ஆடுகிறது.

தற்போது தொடர்மழை காலமாக இருப்பதால் அடிக்கடி பலத்த காற்று வீசுகிறது. இதனால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மரம் இப்ப விழுமோ.. எப்ப விழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு பொதுப்பணித்துறையினர் காலம் தாழ்த்தாமல் உடனே பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும் என நோயாளிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூகஆர்வலர் தங்கப்பாண்டி கூறுகையில், ‘வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் உள்ள பட்டுப்போன மரம் பலத்த காற்றுக்கு ஆடுவது நோயாளிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. சூறாவளி போல் காற்று அடித்தால் கண்டிப்பாக மரம் விழுந்து விழும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மரத்தை அகற்ற முன்வர வேண்டும்’ என்றார்.

Related Stories: