ஓட்டல், பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர், டிச.5:  திருப்பூர்  மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் நேற்று ஓட்டல், பேக்கரிகளில் ஆய்வு செய்தனர். திருப்பூர்  மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன  அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல்லடம் பஸ் நிலையம் சுற்றுவட்டார  பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகள், பானிபூரி கடைகள், பெட்டிக் கடைகள்,  ஆவின் பூத் மற்றும் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது  22 கிலோ மீன், 11 கிலோ கலப்பட டீ  துாள், 13 கிலோ அழுகிய  உருளைக்கிழங்கு, 3 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  மேலும் உணவு பொருட்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பொது மக்களுக்கு வழங்க வேண்டும். கலப்படம்,  தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். தொடர்ந்து கலப்பட பொருட்கள் கண்டுபிடிக்கும் பட்சத்தில் உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: