திருச்சி மாநகர்

திருச்சி, டிச. 5: திருச்சி மாநகரின் கடைவீதிகள், குடியிருப்புகளில் சேட்டை குரங்குகளின் தொல்லையால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளான சின்ன கடை வீதி பெரிய கடை வீதி, பாபு ரோடு, ஆண்டார் வீதி மற்றும் தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் வணிக நிறுவனங்கள், தரைக்கடைகள், பழக்கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளது.இப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு கடந்த சில நாட்களாக குரங்கு கூட்டம் ஒன்று தொல்லை கொடுத்து வருகிறது. இந்த குரங்குகளால் இப்பகுதியினர் அவதிப்பட்டு வருகின்றனர்.இது குறித்து இப்பகுதியில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவர் கூறுகையில், உணவுக்காக இந்த குரங்கு கூட்டம் இந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் சமையல் அறைக்கு சென்று பாத்திரங்களை தள்ளிவிட்டு உணவுப் பொருட்களை உண்ணுவதும், செடிகள் மற்றும் மரங்களில் ஏறி பழங்கள், இலைகளை பறித்து எறிவதுமாக உள்ளன. குறிப்பாக இவைகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏறுவதற்காக கேபிள் வயர்கள் மற்றும் மின் வயர்களில் ஏறி அவைகளை சேதப்படுத்துவதும், குழந்தைகள் உண்ணும் தின்பண்டங்களை பறிப்பதுமான செயல்களில் ஈடுபட்டு இந்த குரங்கு கூட்டம் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர். மேலும் கடைகளுக்குள் திடீரென புகுந்த உணவு பொருட்களை எடுப்பதோடு, சூறையாடிவிட்டும் சென்று விடுகிறது.இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடமும் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும் பலமுறை தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பகுதியில் உள்ள பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் இங்கு சுற்றி திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும் என கூறுகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: