கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்

கோவை, டிச.5: கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குகிறது. கோவை மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இதில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. முதல் கட்டமாக மதுக்கரை, ஆனைமலை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு பகுதி ஊராட்சி ஒன்றியத்திற்கான தேர்தல் வரும் 27ம் தேதி நடத்தப்படும். வரும் 30ம் தேதி காரமடை, பெரியநாயக்கன்பாளையம், சரக்கார் சாமக்குளம், தொண்டாமுத்தூர், அன்னூர், சூலூர், சுல்தான் பேட்டை ஒன்றியங்களுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. மாவட்ட அளவில் ஊராட்சி பகுதியில் 4,36,327 ஆண் வாக்காளர்கள், 4,57,243 பெண் வாக்காளர்கள், 25 மூன்றாம் பாலினத்தவர் என 8,93,645 வாக்காளர்கள் உள்ளனர். 228 கிராம ஊராட்சிகளில் 2,034 வார்டு கவுன்சிலர், 155 மாவட்ட கவுன்சிலர், 228 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி, 17 மாவட்ட வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இந்த 4 வகை பதவிக்கு மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் வரும் 13ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வரும் 13ம் தேதி மனு தாக்கல் செய்ய இறுதி நாள். வரும் 16ம் வேட்பு மனு தொடர்பாக ஆய்வு நடத்தப்படும். வரும் 18ம் தேதி வேட்பு மனு திரும்ப பெறலாம். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஞாயிறு தினத்தில் மனு தாக்கல் செய்ய முடியாது. மாநில தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி மனு தாக்கல் செய்யவேண்டும். விதிமுறைகளை மீறக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் ஊராட்சி பகுதிகளில் 1,520 ஓட்டு சாவடி அமைக்கப்படவுள்ளது. இந்த ஓட்டு சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டு பதிவு செய்யலாம். 4 வகையான ஓட்டு சீட்டுகளில் ஓட்டு போடலாம். ஓட்டு பதிவு இயந்திரம் பயன்படுத்த மாட்டாது. 4 வகை நிறங்களில் ஓட்டு சீட்டு தயாராக உள்ளது. வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட பின்னர், ஓட்டு சீட்டுகளில் பெயர், சின்னம் பதிவு செய்யப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர். மாவட்ட அளவில் 26 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட கலெக்டர் ராசாமணி உத்தரவின் பேரில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பஞ்சாயத்து) முத்துகருப்பன் மேற்பார்வையில் தேர்தல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: