மக்கள் எதிர்பார்ப்பு மைலம்பட்டி அரசு மருத்துவமனை முன்பு 9ம் தேதி விவசாய சங்கம் சார்பில் நடைபெற இருந்த பாடைகட்டும் போராட்டம் வாபஸ்

கடவூர்,டிச.5: மைலம்பட்டி அரசு மருத்துவமனை முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பாடைகட்டும் போராட்டம் நடத்துவது சம்மந்தமாக அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் வரும் 9ம் தேதி மைலம்பட்டி அரசு மருத்துவமனை முன்பு பாடை கட்டும் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதில் மைலம்பட்டி அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கக் கூடிய மருத்துவமனையாக இல்லை. 24 மணி நேரமும் டாக்டர்கள் மருத்துவமனையில் இல்லை. மற்றும் பிண கூறு ஆய்வு அறை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் கடவூர் தாசில்தார் மைதிலி, முதுநிலை மருத்துவர் சாந்தாதேவி, சிந்தாமணிபட்டி எஸ்ஐதங்கவேல் ஆகியோர் முன்னிலையில் நடத்தப்பட்டது. மருத்துவத்துறை சார்பில் கடந்த 1 மாதத்தில் 5 மருத்துவர்களுடன் மருத்துவமனை இயங்குகிறது. மேலும் கடந்த 2016ம் ஆண்டு வட்டத் தலைமை மருத்துவமனையாக மாறியது, அதற்கான போதிய டாக்டர்கள் பற்றாக்குறை இருந்தது.

அதன் பிறகு நவம்பர் 14ம் தேதி அன்று மருத்துவ இணை இயக்குநருக்கு இது சம்மந்தமாக கடிதம் அனுப்பப்பட்டு கூடுதல் டாக்டர்கள் நியமிக்க ஆணை வரப்பெற்ற உடன் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என கூறினார். கடந்த மாதத்தில் 18 பிரிவுகள் குறிப்பாக பிணக்கூறு ஆய்வு அறை உள்பட அமைத்துத்தரக்கோரியும், உபகரணங்கள் பெற அரசுக்கு ஆணை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.ஆணை வரப்பெற்ற பின் பின்னர் அனைத்து வசதிகளையும் செய்து தரப்படும் என தெரிவித்தனர். தற்சமயம் 24 மணி நேரமும் மருத்துவமனையும், டாக்டர்களும் இயங்குவார்கள். எந்தவொரு நோயாளிகளையும் கவனக்குறைவாக பேச மாட்டார்கள் என மருத்துவத் துறை சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்பு அமைதி பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்தது.இதையடுத்து விவசாய சங்கம் சார்பில் நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கூட்டத்தில் விவசாய சங்க ஒன்றியத் தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் இலக்குவன், வட்டச் செயலாளர் பழனிவேல், விவசாய சங்க மாவட்டத் தலைவர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: