போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்த ஷேர் ஆட்டோக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் டிரைவர்கள் மறியல்

திருப்பத்தூர், டிச.5: திருப்பத்தூரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்த ஷேர் ஆட்டோக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருப்பத்தூரின் சுற்று பகுதிகளான கந்திலி, புதுப்பேட்டை, ஜோலார்பேட்டை, விசமங்களம், மாடப்பள்ளி, கொரட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் 500க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் அதிக பயணிகளை ஏற்றி சென்று வருகின்றனர். மேலும், இந்த ஷேர் ஆட்டோ டிரைவர்கள் பஸ் நிலையத்திலிருந்து மீனாட்சி தியேட்டர்- புதுப்பேட்டை சாலை வரை சாலை ஓரங்களில் ஆட்டோக்களை நிறுத்தி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் ஆட்டோக்களை ஆங்காங்கே நிறுத்தி உள்ளனர். இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கடந்த மாதம் திருப்பத்தூர் மாவட்டமாக உருவாக்கப்பட்டு அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பால் நடந்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் புதிய பஸ் நிலையம், மீனாட்சி நிலையம், புதுப்பேட்டை ரோடு, ஆசிரியர் நகர் போன்ற நகர பகுதிகளில் ஆட்டோ ஸ்டேண்டுகள் அமைத்து 10 முதல் 15 பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

இதனால், எஸ்பி விஜயகுமாருக்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்யாமலுல், அதிகளவு பயணிகளை ஆட்டோக்களில் ஏற்றக்கூடாது என்று கூறினர். அதற்கு ஆட்டோ டிரைவர்களும் ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர். இதையடுத்து, ஆட்டோ டிரைவர்களும் எழுதிகொடுத்ததை காற்றில் பறக்கவிட்டு அதிகளவில் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். மேலும், நேற்று பஸ் நிலையம் அருகே போக்குவரத்து இடையூறாக ஆட்டோக்களை நிறுத்தி பத்துக்கும் அதிகமான பயணிகளை ஆட்டோக்களின் ஏற்றி சென்றனர்.

இதைப்பார்த்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோக்களுக்கு ஆபராதம் விதித்தார். மேலும், ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்தார். இதனால், ஆத்திரமடைந்த ஷேர் ஆட்டோ டிரைவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், நேற்று காலை புதுப்பேட்டை- சேலம் சாலையில் ஆட்டோக்களை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் பழனி ஷேர் ஆட்டோ டிரைவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, ஷேர் ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: