காஞ்சிபுரம் நகராட்சி 41வது வார்டில் கால்வாய் வசதி இல்லாததால் தண்ணீரில் மிதக்கும் கன்னிகாபுரம்

காஞ்சிபுரம், டிச.5: காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு 41வது வார்டு கன்னிகாபுரம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில், அப்பகுதி மிதக்கும் நிலையில் உள்ளது. அதில், கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில் பெரியார் நகரை அடுத்து கன்னிகாபுரம் பகுதி உள்ளது. காஞ்சிபுரம் நகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டபோது இப்பகுதி காஞ்சிபுரம் பெருநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. நகராட்சியின் 41வது வார்டான இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி தாழ்வான பகுதியாக இருப்பதால் சிறிய அளவில் மழை பெய்தாலும் மழைநீர் வெளியேற உரிய கால்வாய் வசதி இல்லாததால், குளம்போல் தேங்கி நிற்கிறது. மழை நின்ற பிறகும் மழைநீர் தொடர்ந்து தேங்குவதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும் பெரும் சிரமம் அடைகின்றனர். பள்ளி மாணவர்கள் தினமும் காலையில் அவசரமாக செல்லும் போது தேங்கியுள்ள மழைநீருடன் கலந்து கழிவுநீரில் விழுந்து காயமடைகின்றனர்.

மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகமாகி, பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக, நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.இகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், சிறிய அளவில் மழை பெய்தாலும் இந்த பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கிவிடும். தண்ணீர் வடிவதற்கு ஏறக்குறைய 10 நாட்களுக்கு மேல் ஆகும். இதனால் இப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால், சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசு தொல்லை அதிகரித்து, தொற்றுநோய் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். எனவே, 41வது வார்டு கன்னிகாபுரம் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: