திருக்கழுக்குன்றம் கிரிவலப்பாதை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் பக்தர்கள் தவிப்பு

திருக்கழுக்குன்றம், டிச.5: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கிரிவலப் பாதை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும். மேலும், கழிவுநீர் முறையாக செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்தித்தரவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கிரிவலப்பாதை அருகே உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் எதிரே கடந்த 3 மாதங்களுக்கு முன் சாலையின் குறுக்கே ஒரு சிறு பாலம் அமைக்கப்பட்டது.

அந்த சிறு பாலத்துக்கு முறையாக கால்வாய் வசதி அமைக்கவில்லை. இதனால், அருகில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் முறையாக கால்வாயில் செல்வதில்லை.இதையொட்டி, சிறு பாலம் அருகே கழிவுநீரும், மழைநீரும் குளம் போல் தேங்கி நிற்கிறது. அந்த கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதாலும், கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதாலும் கிரிவலம் செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். முறையான கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Related Stories: