கல்பாக்கம் அருகே வாயலூர் பாலாற்று தடுப்பணையை கலெக்டர் ஆய்வு

திருக்கழுக்குன்றம், டிச.5: வாயலூர் பாலாற்றில் கட்டப்பட்டுள்ள புதிய தடுப்பணையை செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் ஆய்வு செய்தார். கல்பாக்கம் அடுத்த வாயலூர் பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த பகுதிகளில் பெய்து வரும் மழையால், பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையொட்டி,    வாயலூர் பாலாற்றின் புதிய  தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. மேலும், தடுப்பணையில் இருந்து, வினாடிக்கு 8,500 கனஅடி உபரிநீர் வெளியேறுகிறது.இந்நிலையில் செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ், வாயலூர் தடுப்பணையை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அணையில் பெருகி வரும் தண்ணீரின் அளவு, தடுப்பணையின் இருகரை பகுதிகளின் பலம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் பாலாற்றில் தொடர்ந்து நீர் அதிகரித்து வருவதாலும் அதிகளவில் உபரிநீர் வெளியேறி வருவதாலும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணைப் பகுதியில், பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம். செல்பி எடுக்க கூடாது என அறிவுறுத்தினார்.

மேலும் அணைப்பகுதியில் போலீசாரை நியமித்து, உரிய கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டு கொண்டார். அதேப்போல் தடுப்பணை பகுதிக்கு சென்று வர ஏதுவாக சாலை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். தடுப்பணையின் கரைப் பகுதியில் பூங்கா ஒன்று அமைக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, ஆர்டிஓ செல்வம், திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் தங்கராஜ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் அம்பலவாணன் ஆகியோர் இருந்தனர்.

Related Stories: