செய்யூர் அருகே மேலப்பட்டு கிராமத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கழிவுநீர் தேங்கியுள்ள குட்டை

செய்யூர், டிச.5: செய்யூர் அருகே மேலப்பட்டு கிராமத்தில் குடியிருப்புகளுக்கு இடையே பராமரிப்பு இல்லாத குட்டையில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குட்டைபோல் தேங்கியுள்ளது. அதனை சீரமைக்காத அதிகாரிகளால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. செய்யூர் வட்டம், லத்தூர் ஒன்றியம் சிறுங்குணம் ஊராட்சியில், மேலப்பட்டு கிராமம் அமைந்துள்ளது.  இந்த கிராமத்தில் உள்ள புதிய காலனி 2வது தெருவில் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான குட்டை உள்ளது.அரசுக்கு சொந்தமான இந்த குட்டையை, அதே பகுதியில் வசிக்கும் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த பல ஆண்டுகளாக அதிகாரிகள் குட்டையை முறையாக பராமரிக்காமல் விட்டதால்,, குப்பை கொட்டும் இடமாக மாறியது. மேலும், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், இந்தக் குட்டையில் சேருவதாக கூறப்படுகிறது.

ஆண்டுதோறும் பெய்யும் மழையின்போது, இக்குட்டையில் நிரம்பும் மழைநீர், கழிவுநீருடன் கலந்து அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.  இந்த கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, பொதுமக்களுக்கு பல்வேறு தொற்றுநோய், மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த குட்டையை தூர் வாரி சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும், அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் இந்த குட்டையை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து,  முறையாக பராமரிக்க வேண்டும்.  இல்லையெனில் குட்டையை முழுமையாக மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories: