குடிநீர், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகள் இல்லாத வட்டார வளர்ச்சி அலுவலகம்

வாலாஜாபாத், டிச.5 : வாலாஜாபாத்தில் உள்ள, வட்டார வளர்ச்சி அலுவலகம் அடிப்படை வசதிகள் இல்லாமல் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கீழ் 61 ஊராட்சிகள் செயல்படுகின்றன. இந்த, 61 ஊராட்சிகளிலும் பல்வேறு அரசு நலத்திட்ட பணிகள் செயல்படுகின்றன. இந்த பணிகளுக்கான சிமென்ட், கம்பி, கதவுகள் உள்பட பல்வேறு பொருட்கள் எடுத்து செல்லப்படுகின்றன. இதனால், தினமும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள், இந்த வட்டார வளர்ச்சி அலுவலகம் வந்து செல்கின்றனர். மேலும், கிராமங்களில் முறையான சாலை இல்லை, மின் விளக்குகள் எரிவதில்லை, குடிநீர் சரிவர வருவதில்லை, 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கான கூலி வழங்குவதில்லை என பல்வேறு பிரச்னைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட தினமும் நூற்றுக்கணக்காணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர், சுற்றுப்புற சுகாதாரம் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. அலுவலகத்தின் பின்புறத்தில் முட்புதர்கள்  காடுபோல் காட்சியளிக்கின்றன. இந்த புதர்களில் பாம்பு உள்பட பல்வேறு விஷப் பூச்சிகள் நடமாடுவதாக இங்கு வரும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு கிராம பிரச்னைகளுக்காகவும்,  ஊராட்சிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு இங்கிருந்து சிமென்ட், கம்பி, கதவு  ஆகியவற்றை எடுத்து சொல்லவும் வந்து செல்கின்றனர்.இங்கு வந்து செல்வோர்களில் பெரும்பாலோனோர் முதியோர்.

இவர்களுக்கு இங்கு அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும், இந்த அலுவலகத்தின் பின்புறம் முட்புதர்கள் முளைத்து காடுபோல் காட்சியளிக்கிறது. இங்கு பாம்புகள் உள்பட பல்வேறு விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இதனால், இங்கு வரும் மக்கள் அச்சப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் கிராமப்புறங்களில் உள்ள அரசு கட்டிடங்கள் அருகில்  புதர்கள் இருந்தால் அவற்றை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அகற்ற வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலேயே இதுபோன்ற முட்புதர்கள் வளர்ந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும்.  வரும் உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பகுதியாக உள்ள இந்த பகுதியை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: