மாவட்டம் முழுவதும் தொடர் மழை 1,230 ஏரிகளில் 179 மட்டுமே நிரம்பின

திருவள்ளூர், டிச. 5: திருவள்ளூர் மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்தும், நீர்வரத்து கால்வாய்கள் தூர் வாரப்படாததால் 1,230 ஏரிகளில் 179 மட்டுமே முழு அளவு நிரம்பியுள்ளன. மற்றவை வறண்டு கிடக்கிறது. அதேபோல், கோயில் குளங்கள் அனைத்தும் நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுகிறது.  திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 576 ஏரிகளும், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் 654 சிறு அளவிலான ஏரிகளும் உள்ளன. மேலும், 3,227 குளம், குட்டைகள் உள்ளன.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில், இந்த ஆண்டு, குடிமராமத்து மற்றும் நீர்நிலைகள் தூர் வாரும் திட்டத்தின் கீழ், 1,212 ஏரி, குளம் மற்றும் குட்டைகளில், பணிகள் நடைபெற்றன. இவற்றில் பெரும்பாலான நீர்நிலைகளில், பணிகள் நிறைவடைந்து விட்டன.

சமீப காலமாக பெய்து வரும் தொடர் மழையால், ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள 576 ஏரிகளில், 117 ஏரிகள் முழு அளவும், 75 ஏரிகளில் 75 சதவீதமும், 132 ஏரிகளில் 50 சதவீதத்திற்கு மேலும், 165 ஏரிகள் 50 சதவீதத்திற்குள்ளும் தண்ணீர் நிரம்பி உள்ளன.

ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 654 ஏரிகளில், 62 ஏரிகள் முழு கொள்ளளவும், 158 ஏரிகளில் 75 சதவீதமும், 208 ஏரிகளில் 50 சதவீதமும் தண்ணீர் நிரம்பி உள்ளன. மேலும், 3,227 குளம், குட்டைகளில், 308 குளங்கள் முழு அளவும், 868 குளங்கள் 75 சதவீதமும், 762 குளங்கள் 50 சதவீதமும் நிரம்பி உள்ளன. இவ்வாறு மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்தும், 250க்கும் மேற்பட்ட ஏரிகள், 1,500க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் முற்றிலும் வறண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், நீர்நிலைகளுக்கு மழைநீர் வரும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புதான். இதை பொதுப்பணித்துறை மற்றும் ஊராகவளர்ச்சித்துறை அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளதால்தான் மழைநீரை சேமிக்க இயலவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வறண்டு கிடக்கும் 300 கோயில் குளங்கள்

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமாக மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட கோயில் குளங்கள் உள்ளன. இந்த கோயில் குளங்களும் நீர்வரத்து இன்றி முற்றிலும் வறண்டு கிடக்கிறது. இதனால், பல கோயில்களில் தெப்பத் திருவிழா கூட நடைபெறுவதில்லை. அனைத்து கோயில் குளங்களையும் முறையாக பராமரித்து, மழைநீர் சேகரிக்கும் வகையில் குளங்களுக்கு வரும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: