திருவண்ணாமலை தீப விழாவுக்கு கிராமப்புற பஸ்கள் இயக்குவது தவிர்க்க மாணவர்கள் வலியுறுத்தல்

திருவள்ளூர், டிச. 5: திருவள்ளூர் மாவட்டத்தில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு டவுன் பஸ்கள், விரைவு, அதிவிரைவு பஸ்கள் இயக்கப்படுகிறது.  நகரங்களுக்கு அதிக பஸ்கள் இயக்குவதால், ஒரு பஸ் சென்றால் மற்றொரு பஸ்சில் மக்கள் பயணம் செய்யலாம். ஆனால், கிராமப்புறங்களுக்கு குறைந்த பஸ்கள் இயக்குகின்றனர். அமாவாசை, பவுர்ணமி விஷேச தினங்களில் கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்களை நகர பகுதிகளுக்கு மாற்றி போக்குவரத்து அதிகாரிகள் அனுப்புகின்றனர். இதனால், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வரும் மாணவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.

திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீப விழா  வருகிற 10ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பஸ்களில் கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்களையும் அதிகாரிகள் ஆண்டுதோறும் இயக்கி வருகின்றனர். இதனால், கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொது மக்கள், சரியான நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.  எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமங்கள் வழியாக இயக்கப்படும் அரசு பஸ்களை நிறுத்தி, திருவண்ணாமலைக்கு இயக்குவதை தவிர்க்க விழுப்புரம் கோட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: