பட்டாபிராம் பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் தண்ணீர்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஆவடி, டிச.5: பட்டாபிராமில் தொடர் மழையால் வீடுகளை சூழ்ந்து தண்ணீர் நிற்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம், குறிஞ்சி மாநகர் பகுதி உள்ளது. இங்குள்ள தாமரை தெரு, ரோஜா தெரு, மல்லிகை தெருவில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேற்கண்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு  முன்பு பெய்த மழையால் தெருக்களில் வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் வெளியேற முடியவில்லை. இதன் காரணமாக தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், மழை நீருடன் கழிவு நீரும்  கலந்து ஆங்காங்கே நிற்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குறிஞ்சி மாநகர் பகுதியை சுற்றியுள்ள தெருக்களில் பல ஆண்டுகளாக வடிகால் வசதி இல்லை. சிறு மழை பெய்தால் கூட தெருக்களில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. மேலும், பல வீடுகளை சூழ்ந்து தண்ணீர் நிற்கும். இதனால் ஆண்டுதோறும் குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த சில தினங்களாக மழை விட்டு விட்டு பெய்கிறது. இதன் காரணமாக, குறிஞ்சி மாநகர் பகுதியில் அனைத்து தெருக்களிலும் வீடுகளை சூழ்ந்து தண்ணீர் நிற்கிறது. இதனால், பாதசாரிகள் தண்ணீரில் அவதிப்படுகின்றனர். மேலும், முதியோர், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் தண்ணீரில் நடந்து செல்ல முடியவில்லை. மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் தெருக்களில் உள்ள தண்ணீரில் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், தேங்கி நிற்கும் மழை நீரில் கழிவு நீரும் ஆங்காங்கே கலந்து நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.  மேலும், தண்ணீர் தேங்கி நிற்கும் தெருக்களில்  ஏற்கனவே சாலைகள் பல ஆண்டாக போடப்படாமல் உள்ளது. இதனால் குண்டும் குழியுமான சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் விளக்குகள் சரிவர தெரியாததால் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் தொழிலாளர்கள் கீழே விழுகின்றனர். இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் செய்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இனிமேலாவது பட்டாபிராம், குறிஞ்சி மாநகர் பகுதியில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீருடன் கலந்த மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: