கூவம் ஆற்றில் கட்டிய 222 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

சென்னை: சென்னை திருமங்கலத்தில் கூவம் நதிக்கரையை ஆக்கிரமித்து கட்டியிருந்த 222 வீடுகளை நேற்று மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. சென்னை திருமங்கலத்தில் கூவம் நதிக்கரையை ஒட்டிய சத்யசாய் நகரில் சுமார் 40 ஆண்டுகளாக, 300 குடும்பத்தினர் வசித்து வந்தனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கூவம் நதிக்கரையை ஆக்கிரமித்து இவர்கள் வீடு கட்டி வசித்து வருவதாகவும், அந்த வீடுகளை உடனடியாக காலி செய்யும்படியும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். இந்த நோட்டீசை அப்பகுதி மக்கள் வாங்க மறுத்ததால் அவர்களது வீடுகளில் ஒட்டிவிட்டு சென்றனர். மேலும், ஆக்கிரமிப்பு பகுதிகளில் நீண்டகாலமாக வசிக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் வீடு வழங்க கடந்த சில நாட்களுக்கு முன் பயோமெட்ரிக் கணக்கு எடுக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்கு அதிகாரிகள் வந்து கூவம் நதிக்கரையோர ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க போவதாகவும், பொதுமக்கள் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் நேற்று திருமங்கலத்தில் கூவம் நதிக்கரை ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்கு சென்னை மாநகராட்சி மண்டல உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தலைமையில் அலுவலர் சுந்தரராஜன், செயற்பொறியாளர்கள் வைத்தியலிங்கம், செந்தில்குமார் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் பொக்லைன் இயந்திரங்களுடன் வந்தனர். அவர்களுடன் திருமங்கலம் காவல் ஆய்வாளர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்கு எதர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாருக்கும் மறியலில் ஈடுபட்ட மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.  பின்னர், ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ளவர்களுக்கு பெரும்பாக்கத்தில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறியதால் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன் பின்னர், அங்குள்ள 222 ஆக்கிரமிப்பு வீடுகளை பொக்லைன் மூலம் இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

வசதிகள் செய்து தர ஏற்பாடு

பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த மாத இறுதிக்குள் கூவம் நதிக்கரையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, இப்பகுதியில் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த சுமார் 2 லட்சம் சதுரஅடி நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இங்குள்ளவர்களுக்கு பெரும்பாக்கத்தில் 400 சதுர அடியில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்று இடம் வழங்கப்படும் மக்கள் இடம் பெயருவதற்கு தேவையான அனைத்து வசதிகள், ஆதார் அட்டைகள் மற்றும் வாக்காளர் அடையாள முகவரிகளை மாற்றி தருவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது’’ என்றார்.

Related Stories: