தூத்துக்குடியில் தொடர் மழையால் தேங்கிநிற்கும் தண்ணீரை அகற்றும் பணி தீவிரம்

ஸ்பிக்நகர், டிச. 5: தூத்துக்குடியில் பெய்த தொடர் மழையால் வீதிகள், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கிநிற்கும் தண்ணீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே தூத்துக்குடி குடியிருப்பு பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட இடங்களில் தரைமட்டத்தில் 2 முதல் 5 அடி வரை உருவான பள்ளங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக பெய்துவரும் மழையை தொடர்ந்து பலஇடங்களில் மழைநீர் தேங்கிநிற்கிறது. இதனைஅகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வ அமைப்பினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதே போல் தூத்துக்குடி சிதம்பரம் நகரில் தேங்கிநின்ற மழையால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இதையடுத்து அங்கு சென்ற மாநகராட்சி ஊழியர்கள், சாலையை தோண்டி புதிதாக வாறுகால் அமைத்து தேங்கிநின்ற மழைநீரை அகற்றினர். இந்நிலையில்  தூத்துக்குடி மாநககர் மற்றும் புறநகரில் குடியிருப்புவாசிகளுக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு பகுதிகளில் திடீரென நிலமானது 2 முதல் 5 அடி வரை பள்ளம் ஏற்பட்டு தரை இறங்குவதால் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து  பெய்த கனமழையால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக போர்வெல்லின் மேல்மட்ட நீர் ஊற்றுகளில் இருந்து தண்ணீர் ஊற ஆரம்பித்திருக்கும். அதன் காரணமாக அதன் அருகேயுள்ள  மணலை அரித்துகொண்டு ஆழ்துளை கிணற்றில் உள்ள தண்ணீர் சென்றிருக்கும். இதன்காரணமாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 5 அடி வரை தரை இறங்கியதால் பள்ளம் உருவாகியுள்ளது. மழை காலங்களில் ஆழ்துளை குழாய் உள்ள பகுதிகளில் நன்றாக சோதனை செய்த பிறகே செல்ல வேண்டும். இத்தகைய இடங்களில் மேற்பகுதி பார்ப்பதற்கு பாதுகாப்பாக இருப்பதுபோல் தெரிந்தாலும் அதன் அருதே காலை வைத்ததும் நிலமானது கீழே இறங்கும் நிலை தொடர்வதால் நன்றாக சோதனையிட்ட பிறகே இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டும்’’ என்றார்.

Related Stories: