ராசிபுரத்தில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

ராசிபுரம், டிச.4: விபத்தில் உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.ராசிபுரம் அருகே குருக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கொண்டி. கூலித்தொழிலாளியான இவர், கடந்த 5.4.2013 அன்று ராசிபுரம் -திருச்செங்கோடு சாலையில் குருக்கபுரம் காலனி பகுதியில் நடந்து சென்றார். அப்போது, எதிரே வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே கொண்டி உயிரிழந்தார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பான வழக்கு ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனையடுத்து கடந்த 22.3.2017ல் விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடாக ₹2.20 லட்சம் வழங்க அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுபடி இழப்பீடு தராததால், உயிரிழந்த கொண்டி மகன் கொண்டன் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து ராசிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி சரவணன், மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ₹2.88 லட்சம் வழங்க உத்தரவிட்டார். இதன் பின்னரும் அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதைத்தொடர்ந்து அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, நேற்று நீதிமன்ற அமீனா, வக்கீல்கள் ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர்.

Related Stories: