மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை சுமூகமாக நடத்திட ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

நாமக்கல், டிச.4: நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை நல்ல முறையில் நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார். நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இப்பணியில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண் துறை, கூட்டுறவுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள். தேர்தல் அறிவிப்பு வெளியிடுதல், வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்தல், பெற்றுக் கொண்ட வேட்புமனுக்களை பரிசீலித்தல், வேட்பு மனுக்களை திரும்ப பெறுதல், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கிடுதல், வாக்குச்சாவடி அலுவலர்களை நியமனம் செய்தல் மற்றும் பயிற்சி அளித்தல், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளுக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் மெகராஜ் பேசியதாவது:  தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அறிவுரைப்படி நடந்து கொள்ளவேண்டும். மாநில தேர்தல் ஆணையம் அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளை நேரில் சென்று பார்வையிட்டு, அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு வாக்களிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும்  செய்யவேண்டும். சேலஞ்ச் ஓட்டு, டெண்டர் ஓட்டு உள்ளிட்ட தேர்தல் நடைமுறைகள் குறித்து விரிவாக தெரிந்து கொண்டு, வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கவேண்டும்.

நன்னடத்தை விதிகளை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேர்தல் சுமூகமாக நடைபெற பணிகளை குறித்த காலத்திற்குள் சரியாக திட்டமிட்டு முடித்துவிட வேண்டும். மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை நல்ல முறையில் நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோவிந்தராஜன் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: