மாவட்டத்தில் தொடர் குற்றங்களால் பொதுமக்கள் அச்சம்

கிருஷ்ணகிரி, டிச.4: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்து வரும் தொடர் குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு, வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தநிலையில், மாவட்ட எஸ்.பியாக பண்டிகங்காதர் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடித்து குண்டர் சட்டத்தில் அடைத்து நடவடிக்கை எடுத்தார். இதனால், குற்றங்கள் குறைந்து வந்தது. இந்நிலையில், மாவட்ட பகுதிகளில் மீண்டும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் நடந்த சம்பங்கள்: தேன்கனிக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ₹1.50 லட்சம் மதிப்பிலான கேமரா திருட்டு போனது. உத்தனபள்ளி பகுதியில் நிறுத்தியிருந்த லாரியில் 130 லிட்டர் டீசல் திருடப்பட்டது. பர்கூர் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் 11 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

சூளகிரியில் நேற்று முன்தினம் வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகை மற்றும் ₹35 ஆயிரம் திருடப்பட்டது. இச்சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கொள்ளையை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் உடைமைகளை காக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: