கேஆர்பி அணை தண்ணீர் வரும் கால்வாய்களை தூர்வார வேண்டும்

காரிமங்கலம், டிச.4: காரிமங்கலம் பகுதி ஏரிகளுக்கு, கேஆர்பி அணை தண்ணீர் வரும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில், கடந்த சில வருடங்களாக போதிய மழை பெய்வதில்லை. இதனால் ஏரி, குளம் குட்டைகள் என அனைத்தும் வறண்டே காணப்படுகிறது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பெய்த போதும், கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏரிகளுக்கு போதுமான தண்ணீர் வரவில்லை. காரிமங்கலம் பகுதியின் ஒரே நீர் வரும் ஆதாரம் கேஆர்பி அணை தண்ணீர் மட்டுமே. இந்த அணையில் கடந்த 2014-15ம் ஆண்டு டிசம்பர், ஜனவரி மாதங்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் பருவ மழையும் நன்றாக பெய்ததால் காரிமங்கலம் தாலுகா ஏரிகள் அனைத்தும் நிரம்பியது. அதன்பின் தண்ணீர் வந்தாலும் ஒரு சில ஏரிகள் மட்டுமே நிரம்பியது. கடைமடை ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் முன் அணையில் நீர் இருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் தண்ணீர் நிறுத்தப்பட்டு விடுகிறது. கேஆர்பி அணையிலிருந்து வலதுபுற கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு, காரிமங்கலம் மணிக்கட்டியூர் மதகிற்கு வருகிறது. இங்கிருந்து ஒரு மதகில் திண்டல் ஏரி பக்கமும், மற்றொரு மதகில் இருந்து காரிமங்கலம் பெரியேரி பக்கம் உள்ள ஏரிகளுக்கும், தண்ணீர் பிரிந்து செல்கிறது.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள திண்டல் ஏரி தண்ணீர் நிரம்பி, அதன் பின் ஊராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள பந்தாரஅள்ளி ஊராட்சியில் உள்ள பந்தாரஅள்ளி, கீழ்சவுளுபட்டி, மண்ணாடிபட்டி, நடுக்குட்டை, நடுக்கொட்டாய் ஏரி, முள்ளனூர் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் மணிக்கட்டியூர் மதகிலிருந்து சிறிது தொலைவிலேயே உள்ள எச்சனம்பட்டி ஏரி உள்ளது. ஆனால் இதுநாள் வரை எச்சனம்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. இந்தாண்டு ஏரிக்கு வரும் கால்வாய்களை சரிசெய்து தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது திண்டல் ஏரி பக்கமும், காரிமங்கலம் பெரியேரி நிரம்பி குட்டூர் ஏரி மற்றும் சந்தைபேட்டை ஏரிக்கு தண்ணீர் வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் காரிமங்கலம் தாலுகாவில் உள்ள பல ஏரிகளில் குடிமராமத்துப்பணி மேற்க்கொள்ளப்பட்டு ஏரிகள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளது. இதனால் முழு கொள்ளளவு தண்ணீரை ஏரிகளில் தேக்கி வைக்க ஏதுவாக உள்ளது.

இருப்பினும் குட்டூர் ஏரியில் இருந்து வண்ணான் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய், வண்ணான் ஏரியில் இருந்து பெரியமிட்டஅள்ளி ஏரிக்கு செல்லும் கால்வாய், காரிமங்கலம் மேம்பாலம் அருகே தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு முட்புதர் செடிகள் வளர்ந்துள்ளது. பெரியமிட்டஅள்ளி ஏரி நிரம்பி உச்சம்பட்டி, தெல்லம்பட்டி கரகப்பட்டி ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வேண்டும். அதேபோல் வண்ணான் ஏரியில் இருந்து சின்னமிட்டஅள்ளி ஏரி, சிக்கதிம்மனஅள்ளி ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வேண்டும்.

தற்போது கால்வாயில் தண்ணீர் வருகிறது. ஆனால் கால்வாய்கள் புதர்மண்டி காணப்படுவதால், கடைமடை ஏரிகள் வரை தண்ணீர் சென்றடையுமா என்ற கேள்விக்குறியாக உள்ளது. பல்வேறு இடங்களிலும் கால்வாயில் புதர்மண்டியுள்ளதால் நீரின் வேகம் தடைபட்டு, தண்ணீர் செல்ல தாமதமாகின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் கேஆர்பி அணை தண்ணீர் செல்லும் கால்வாய்கள் அனைத்தையும், போர்க்கால அடிப்படையில் தூர்வாரி சீரமைத்து கொடுத்தால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயரும், குடிநீர் பிரச்னையும் தீரும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: