தரைப்பாலம் தண்ணீரில் மூழ்குவதால் மழை காலங்களில் மயானத்துக்கு செல்ல சிரமப்படும் கீழச்சுரண்டை பொதுமக்கள்

சுரண்டை, டிச. 4: மழை காலங்களில் மயானத்துக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்குவதால், இறந்தவர்களை எடுத்து செல்ல கீழச்சுரண்டை பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சுரண்டை அருகே உள்ள கீழச்சுரண்டையை சேர்ந்த இரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தனித்தனி மயானம் அனுமன்நதி அருகி உள்ளது. இந்த மயானத்திற்கு செல்லும் வழியில் ஆற்றை கடக்க தரைப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தொடர் மழை பெய்தாலும், மேற்குத்தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டினாலும் தரைப்பாலத்தை தண்ணீர் மூழ்கடிக்கிறது.

இவ்வாறு தண்ணீர் செல்லும்பொது இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். சில நேரங்களில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தால் தரைப்பாலம் அருகே இறந்தவர் உடலுடன் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுவதாக ஆதங்கம் தெரிவித்தனர். மேலும் மயானம் அருகே உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, இந்த தரைப்பாலம் வழியாகத்தான் விவசாயிகள் விளைபொருட்களை டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனம் மூலம் கொண்டு செல்கின்றனர். விவசாயிகளும் மழை காலங்களில் மிகுந்த சிரமத்திற்க்கு உள்ளாகின்றனர். கால்நடைகளையும் விவசாய பணிகளுக்கு கொண்டு செல்ல முடிவதில்லை.  எனவே இப்பகுதியில் மேம்பாலம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: