சேடபட்டி சாலையில் ஜாக்கிரதை சுத்தமானது...சுவையானது... கொடைக்கானல் செல்லும் தேனி ‘மட்டன்’

தேனி, டிச.4: ஆட்டு இறைச்சி வாங்க கொடைக்கானல் மற்றும் சுற்றுக்கிராமங்களை சேர்ந்த மக்கள் 200 கி.மீ., துாரம் பயணித்து தேனிக்கு வருகின்றனர். தேனியில் பெரியகுளம் ரோட்டோரம் உள்ள இறைச்சி கடைகளில் அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை பெரிய கார்கள் நிற்பதை காணமுடியும். இவர்கள் ஆட்டு இறைச்சி வாங்க கொடைக்கானலில் இருந்து சுமார் 100 கி.மீ., தொலைவில் உள்ள தேனிக்கு வருகின்றனர். குறைந்தது வாரந்தோறும் தேனியில் இருந்து கொடைக்கானலுக்கு 10 முதல் 15 ஆடுகள் வரை உரிக்கப்பட்டு இறைச்சி வெட்டப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. இது குறித்து தேனி இறைச்சி வியாபாரிகள் கூறியதாவது: கொடைக்கானலில் வளர்க்கப்படும் ஆடுகள் குளிர்பிரதேசத்தில் வளர்வதால் அதன் இறைச்சி ‛சொதசொதவென’ சுவையின்றி இருக்கும். தேனியில் விற்கப்படும் ஆடுகள் வெப்பமான பிரதேசத்தில் காட்டுப்பகுதிகளில் வளர்க்கப்பட்டவை. இதன் இறைச்சி இறுகி மிகவும் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும். குறிப்பாக அருப்புக்கோட்டை, விருதுநகர், டி.கல்லுப்பட்டி, திருமங்கலம், வருசநாடு, பாலக்கோம்பை, சீப்பாலக்கோட்டை, ஓடைப்பட்டி போன்ற வறண்ட பகுதிகளில் வளர்க்கப்படும் ஆடுகளை நாங்கள் வாங்கி விற்கிறோம். இந்த ஆடுகளின் இறைச்சி மிகவும் கெட்டியாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும். எனவே கொடைக்கானல் பகுதியில் வசிக்கும் முக்கிய பிரமுகர்கள் குறிப்பாக பங்களாக்களில் வசிப்பவர்கள் தேனிக்கு கார் எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

இவர்கள் வந்த பின்னரே ஆடுகளை சுட்டிக்காட்டுவார்கள். அவர்கள் காட்டும் ஆட்டினை அறுத்து  உரித்து இறைச்சியாக வெட்டிக் கொடுப்போம். எதையும் ஒதுக்காமல் வாங்கிச் செல்வார்கள். குறைந்தது வாரம் 10 முதல் 15 ஆடுகளையாவது வாங்கிச் செல்வார்கள். இதேபோல் பல கடைகளில் வாங்குகின்றனர். சிலர் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, தேவதானப்பட்டி போன்ற இடங்களில் வாங்கிச் செல்வார்கள். இங்குள்ள இறைச்சிக்கடைகளில் பெரும்பாலும் நத்தம், திண்டுக்கல் மாவட்ட கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் அடிக்கப்பட்டு வெட்டப்படுகின்றன. குறிப்பாக வறட்சியான பகுதிகளில் வளர்க்கப்படும் ஆடுகளின் இறைச்சி தான் சாப்பிட நன்றாக இருக்கும். இப்படி வருபவர்கள் முன்கூட்டியே தங்களுக்கு எத்தனை ஆட்டு இறைச்சி தேவை என்பதை அலைபேசி வழியாக தெரிவித்து விடுவார்கள். தவிர கேரளாவின் கடற்கரை ஓரங்களில் வசிப்பவர்கள் தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் வந்து ஆடுகளை வாங்கி பக்குவமாக அறுத்து, ஐஸ் பாக்ஸில் பதப்படுத்தி கொண்டு செல்கின்றனர். இவர்கள் ஆட்டின் எந்த பாகத்தையும் கழிக்காமல் ஒரு கிலோ 800 ரூபாய் என விலை நிர்ணயித்து கொடுத்து விடுவார்கள்.

இப்படி ஆட்டு இறைச்சியின் தேவை அதிகம் இருந்தாலும் ஆடுகள் வளர்ப்பு நாளுக்கு, நாள் குறைந்து கொண்டே வருகிறது. இப்படி வளர்ப்பிற்கும், தேவைக்கும் உள்ள இடைவெளி அதிகரிப்பதால் ஆட்டு இறைச்சியின் விலைகள் இனி வரும் காலங்களில் ஒரு கிலோ ஆயிரம் ரூபாயினை கடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றனர்.

Related Stories: