கம்பராய பெருமாளுக்கு சங்காபிஷேகம்

கம்பம், டிச.4: கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு கம்பம் கம்பராயப்பெருமாள் கோவிலில் 108 சங்குகளுடன் சங்காபிஷேகம் நடைபெற்றது. கார்த்திகை மாதத்தில் வரும் நான்கு திங்கள் கிழமைகளிலும் சிவாலயங்களில் சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். வற்றாத செல்வம், பொருள், இறைவனின் அருள் வேண்டியும், மனித மனங்களும் சங்கைப்போல, நிலையான தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. கார்த்திகை சோமவாரம் மூன்றாம் திங்கட்கிழமையை ஒட்டி சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெற்றது. கம்பம் கம்பராயப்பெருமாள் காசிவிசுவநாத சுவாமி கோவிலில், தரையில் நெல்மணிகளால் சிவலிங்கம் அமைத்து, 108 சங்குகளில் புனிதநீர் பரப்பி, குத்துவிளக்குடன் மலர்சூழ காசிவிசுவநாத சுவாமி கோவில் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி சிவம் தலைமையில் சங்காபிஷேகம் நடைபெற்றது. கோவில் நிர்வாக அதிகாரி போத்திசெல்வி, தக்கார் சுரேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: