திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்த வாக்காளர்கள் 77,429 ஆண்களை விட பெண்களே அதிகம்

திருப்புவனம், டிச.4:  உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 77 ஆயிரத்து 429 வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். தமிழகத்தில் ஊராட்சித்தேர்தல்  நடக்குமா என்ற கேள்வி அரசியல் கட்சிகள் தவிர பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளனர். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஒவ்வொரு ஊராட்சிக்கும்  மத்தியஅரசு  நேரடியாக நிதி வழங்கி வந்ததும் மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. ஆனால் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை தாமதப்படுத்தி வந்தது. உச்ச நீதிமன்றம் இம்மாதம் 13ம் தேதிக்குள் ஊராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என ஆணை பிறப்பித்தது. அதனை தொடர்ந்து தமிழக தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி ஊரட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது.

ஆனால் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற நகர்பாலிகா சட்டத்திற்கு உட்பட்டவைகளுக்கு தேர்தல் அறிவிக்கவில்லை. ஆனாலும் கிராம புறங்களில் தேர்தல் சூடு பிடித்து வருகிறது. திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளில் ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவர்களுக்கான  தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பணிகள் துவங்கி விட்டன. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில்  45 ஊராட்சிகள், 17 ஒன்றிய வார்டுகள், 2 மாவட்ட ஊராட்சி வார்டுகள் 318 கிராம ஊராட்சி வார்டுகள் உள்ளன. ஊராட்சி வாரியாக மொத்த வாக்களர்கள் 77 ஆயிரத்து 429 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 38 ஆயிரத்து 92 பேரும் பெண் வாக்காளர்கள் 39 ஆயிரத்து 337 பேரும் உள்ளனர்.

Related Stories: